தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க கோரி : தி.மு.க.மாவட்ட பொறுப்பாளர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சிகிச்சை நோய் தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்த நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தி.மு.க.மாவட்ட பொறுப்பாளர் கம்பம் நா.இராமகிருஷ்ணன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கம்பம் நா.இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.மகாராஜன் ஆகியோர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜாவிடம் (பொது) அளித்த மனுவின் விபரம் பின்வருமாறு: தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், நோய் பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப்பணிகள் குறித்த நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தேவராம் மலையடிவாரப் பகுதியில் யானைகள் நடமாட்டத்தையும் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதையும் தடுக்க வேண்டும். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் விவசாயப்பணிகளுக்கு சென்று வர இடுக்கி மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி அனுமதி வழங்க வேண்டும்.

18ம் கால்வாய் நீர்வழிப்பாதையை செப்பனிடவும், கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்பப்படும் குளங்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வில் தேனி நகர தி.மு.க.பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோ, தேனி மாவட்ட தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் வீனஸ் கண்ணன் உள்பட தி.மு.க.நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

29 − = 26