போலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்

கான்பூர்: ரவுடிகளால் 8 போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காங்., பொதுச்செயலர் பிரியங்கா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உத்தர பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் டிஎஸ்பி, ஆய்வாளர், இரு உதவி ஆய்வாளர்கள் என 8 பேர் கொல்லப்பட்டனர். இது உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

காங்., பொதுச்செயலர் பிரியங்கா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ரவுடிகள் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த 8 போலீசாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது, கிரிமினல்களுக்கு அரசின் மீது எந்த அச்சமும் இல்லை. சாமானிய மக்கள் முதல் போலீசார் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. முதல்வர் தான் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பானவர். இந்தச் சம்பவத்தில் அவர் கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் கருணை காட்டக்கூடாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டுவிட்டர் பதிவில், ‛கான்பூரில் 8 போலீசார், ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்துக்கு வெட்கக்கேடு, துரதிர்ஷ்டமானது. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநில அரசு மெத்தனமான இருந்துவிட்டது. இனிமேல் கவனமாக இருத்தல் அவசியம். இந்தக் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களை அரசு விடக்கூடாது. இதற்கான சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கவேண்டும். 8 போலீசாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கிட வேண்டும்,’ எனப் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 3 =