பயணிகள் ரயிலை தனியாருக்கு தாரைவார்க்கும் அறிவிப்பு : நாட்டை தன் நட்பு முதலாளிகளுக்கு விற்கிறது மத்திய அரசு – எஸ்.டி.பி்.ஐ. கட்சி கண்டனம்

பயணிகள் ரயிலை தனியாருக்கு தாரைவார்க்கும் அறிவிப்பை, நாட்டை தன் நட்பு முதலாளிகளுக்கு விற்கிறது மத்திய அரசு என கூறி எஸ்.டி.பி்.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:- பயணிகள் ரயில்களை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில், தகுதியுள்ள விண்ணப்பங்களை தனியார் பண முதலைகளிடமிருந்து மத்திய அரசு வரவேற்றிருப்பதன் வாயிலாக, நாட்டை மோடி அரசு தன் நட்பு முதலாளிகளுக்கு விற்றுத் தீர்க்கும் திட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

நாடு விடுதலை அடைந்த பின், வரலாற்றில் இல்லாத வகையில் மத்திய அரசால் கையாளப்படும் மிகமோசமான பொருளாதாரச் சீரழிவை நாடு சந்தித்துக் கொண்டுள்ளது. ஒரு திறமையில்லாத பிரதமரின் தலைமையில் உள்ள, மிகவும் திறமையற்ற மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு தகுதியில்லாத நிதியமைச்சர், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அதலபாதாளத்தில் தள்ளி சீரழித்துவிட்டார். வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் வானத்தைத் தொட்டதோடு மட்டுமில்லாமல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு அதலபாதாளத்திற்கு சென்று வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

நாட்டை ஆளும் பாஜக அரசிடம், நாட்டின் சீரழிந்த பொருளாதாரத்தை மீட்டு தூக்கி நிறுத்த எந்தவித தூரநோக்கோ, திட்டமோ இல்லை என்பது கண்கூடு. நாட்டின் தற்போதைய பொருளாதார நடவடிக்கை என்பது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நாள் தவறாமல் ஏற்றுவது தவிர வேறு எதுவுமில்லை.

மத்திய அரசு பெருநிறுவனங்களின் வரி உயர்வைத் தளர்த்தி அவர்களுக்கு உதவிய காரணத்தால் அரசு கருவூலத்திற்கு வரும் வருவாயை பெருமளவு குறைத்ததே பாஜக அரசின் சாதனையாகும்.

இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடும் சரிவுக்கு கோவிட் 19 சம்மந்தப்பட்ட நெருக்கடி நிச்சயமாக காரணமாக இருக்கவில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு வெகுகாலத்திற்கு முன்பே இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்பதுதான் உண்மை நிலையாகும்.

பொருளாதார மீட்சிக்குரிய தூரநோக்கும், திட்டமிடலும் மத்திய அரசிடம் இல்லாமல் போனதால் ஏற்பட்ட மோசமான நிதிப் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, மத்திய பாஜக அரசு கண்டுபிடித்த தீர்வுதான் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது என்பது. அதன் தொடர்ச்சியாக இப்போது விற்பனைக்காக காத்திருப்பது ரயில்வே துறையாகும்.

நாடெங்கும் மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்த உள்ள 109 வழித்தடங்களில், மக்களின் போக்குவரத்துக்கான 151 நவீன ரயில் தொடர்வண்டிகளை தனியார் பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்க மத்திய அரசு தனியார் ஏலதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அரசுக்குச் சொந்தமான மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதில் இதுவே சமீபத்திய நடவடிக்கையாகும். அடிப்படை ஆதாயத்துறை தவிர்த்த பிற எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் விற்கவிருப்பதாக ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா விடுதலையடைந்த காலகட்டத்தில் முற்றிலும் விவசாயத்தை சார்ந்த நாடாக மட்டுமே இருந்ததோடு, பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. விடுதலைக்குப் பின் அமைந்த ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான இந்திய அரசு நாட்டின் நிலைமையை மிகச்சரியாக கணித்து நாடு எதிர்நோக்கியிருந்த பொருளாதார நெருக்கடிக்கு அவசரமான, அவசியமான தீர்வும், நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதும், நாட்டை தொழில் மயமாக்குதலால் மட்டுமே இயலும் என்பதை உணர்ந்து செயல்பட்டது. அதையொட்டி நேரு அரசு ஐந்தாண்டு திட்டங்கள் வகுத்து நடைமுறைப்படுத்தியது. ஐந்தாண்டுத் திட்டங்களைக் கண்காணிக்கவும் திட்ட மேலாண்மைக் கழகம் (Planning Commission) அமைத்தது. இத்தகைய ஐந்தாண்டு திட்டங்கள் காரணமாக நாடெங்கும் அரசுக்குச் சொந்தமான பெரும் தொழில்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாணப்பட்டது. ஆனால், துரதரிஷ்டவசமாக மோடி அரசோ ஐந்தாண்டு திட்டங்களை நிறுத்தியதோடு மட்டுமில்லாமல் திட்ட மேலாண்மைக் குழுவைக் கலைத்தும் விட்டது.

மத்திய அரசின் கருவூலம் நிதிப்பற்றாக்குறை காரணமாக வறண்டுபோனதால் அரசு சார்ந்த பெருந்தொழில் நிறுவனங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டும், பிரதமரின் கேர் ஃபண்ட் வசூல் வாயிலாகவும் அரசு கருவூலத்தை நிரப்பிக்கொள்ளலாம் என்று பாஜக அரசு கனவுகாண்கிறது.

பாஜகவின் பாசிச அரசில் இந்தியா சமூகநீதி, கூட்டமைப்பு, மக்கள்நல ஆட்சி என்ற அடிப்படைக் கோட்பாட்டை விட்டு விலகி சர்வாதிகார முதலாளித்துவ ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதையே பார்க்க முடிகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாசி பாஜக அரசின் சதித்திட்டத்தை வேரோடு வீழ்த்தவேண்டிய கடமை நமக்குள்ளது.

அரசின் பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்கு விற்பதன் வாயிலாக நாட்டின் இறையாண்மையை பெருமுதலாளிகளிடம் அடகுவைப்பதை மோடி அரசு தவிர்க்க வேண்டும். இத்தகைய நாசகார திட்டத்தை முழுபலத்தோடு எதிர்க்க பாஜக அல்லாத அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 + = 94