அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை மீட்டு, தத்தெடுத்தல் மையத்திடம் மாவட்ட கலெக்டர் ஒப்படைப்பு

அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை மீட்டு, தத்தெடுத்தல் மையத்திடம் மாவட்ட கலெக்டர் த.ரத்னா ஒப்படைத்தார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை பராமரிக்கும் பொருட்டு ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா சிறப்பு தத்தெடுத்தல் மையத்திடம் மாவட்ட கலெக்டர் த.ரத்னாவால் இன்று (03.07.2020) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது :- அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி ஊராட்சி, புலியங்குழி கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்த 1 நாள் ஆன பெண் குழந்தையை மீட்டு, சுத்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னர் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவ அலுவலர்கள் தெரிவித்ததனை தொடர்ந்து, இன்று (03.07.2020) அந்த பெண் குழந்தைக்கு மாவட்ட கலெக்டரால் “தைரிய லெட்சுமி” என்று பெயரிட்டு, ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா சிறப்பு தத்தெடுத்தல் மையத்திடம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் து.வசந்தகுமார் மற்றும் அடைக்கல மாதா சிறப்பு தத்தெடுத்தல் மையத்தினர் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 − 40 =