புதுக்கோட்டையில் விலையில்லா பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு

புதுக்கோட்டையில் விலையில்லா பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பார்வையிட்டார்.

விலையில்லா பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் நிகழ்வு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில்  வைத்து நடைபெற்று வருகிறது. 

விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் மையத்தை பார்வையிட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கூறியதாவது:- 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான விலையில்லா பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் கழக விநியோக மையங்களிலிருந்து தேவையான எண்ணிக்கையில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக மையங்களுக்கு வந்து விட்டது.

தற்பொழுது அந்த பாடநூல்களை பள்ளி துவங்குவதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சமூக விலகலைக் கடைப்பிடித்து அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணிபுரிவார்கள் என்றார்.

நிகழ்வின் பொழுது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் இரா.கபிலன் (உயர்நிலை) புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளர் குருமாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 − = 61