புதுக்கோட்டையில் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக மாவட்ட கலெக்டர் தகவல்

புதுக்கோட்டையில் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையின இனத்தைச் சார்ந்தவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த டாம்கோ திட்டத்தில் கடன் பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி, தெரிவித்ததாவது:- சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின இனத்தைச் சார்ந்தவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம், தனிநபர் தொழில் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுகடன், உதவிகள் வழங்கப்படுகிறது. தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும் தொழில் தொடங்கிடவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம்.

சுய உதவி குழுக்களுக்கான சிறு கடன் பெற இக்குழுவில் குறைந்த பட்சம் 60% சிறுபான்மையினராக இருத்தல் அவசியம். இதர 40% பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர வகுப்பினர் இடம் பெற்றிருக்கலாம்.

மேற்படி கடன்தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவராயின் ரூ.98,000ம், நகர்ப்புறங்களில் வசிப்பவராயின் ரூ.1,20,000ம் உடையவராக இருத்தல் வேண்டும்.

டாம்கோ கடன் பெற விண்ணப்பிக்க விரும்புவோர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், புதுக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி புதுக்கோட்டை, அறந்தாங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 24 = 33