ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி திறப்பு விழா

உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம்   உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவைக்கு பல ஆண்டுகாலங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. எனினும் கோடைகாலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொது மக்கள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் இக்கிராமத்திற்கு மேலும் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின் பேரில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்க உத்தரவிட்டார்.

இப்பணியானது அண்மையில் முடிவடைந்ததையடுத்து இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் ஒன்றிய செயலாளர் டி.குமார் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பாபு வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி எம்.பி. ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியினை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

இதையடுத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய க.சுந்தர் எம்.எல்.ஏ பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + = 27