புதுக்கோட்டையில் திருமணம் உள்ளிட்ட அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் அனுமதி பெற வேண்டும் – மாவட்ட கலெக்டர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட அனைத்து சுபநிகழ்ச்சிகள் குறித்து சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் போர்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தேவையின்றி வெளியில் வருவதை தவிர்த்தல், கைகளை அடிக்கடி சோப்புபோட்டு கழுவுதல் போன்ற பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடையே விளக்கமாக எடுத்துரைத்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இதன் ஒரு பகுதியாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் திருமணம், காதுகுத்து
நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து வகையான சுபநிகழ்ச்சிகள் குறித்து நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

ஊரக பகுதிகளில் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலும், நகர் பகுதிகளில் சம்மந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்திலும், பேரூராட்சி பகுதிகளில் சம்மந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களிலும் தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். பொது மக்கள் இதுபோன்ற சுபநிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து அனுமதி பெறுவதன் மூலம் அதிக கூட்டம் கூடாமல் தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையினை உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 23 = 28