சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் உட்பட 30 பேரை நியமனம் செய்து உடனே பணியில் சேர மாவட்ட எஸ்பி உத்தரவு

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் உட்பட 30 பேரை நியமனம் செய்து உடனே பணியில் சேர மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்ப்பட்டார். 2 உதவி ஆய்வாளர்களும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர்  பெர்னாட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மணிமாறன், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முத்துமாரி, தட்டார்மடம், திருச்செந்தூர், நாசரேத், குலசேகரபட்டணம், மெஞ்ஞானபுரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 17 தலைமைக் காவலர்கள், தூத்துக்குடி ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் 10 காவலர்கள் என மொத்தம் 30 பேர் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக அனைவரும் பணியில் சேர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 6 =