சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் போலீசார் தாக்கியதில்தான் தந்தை, மகன் இறந்துள்ளனர் என்று கூறி அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து எஸ்.ஐ..க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காவல் ஆய்வாளர் ஸ்ரீதரையும் சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சேலத்தில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் கூறியதாவது:- ‘‘சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்திருக்கும்போது உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று உயிரிழந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 68 = 72