புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:- இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2020-ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டரங்கம், இராஜகோபாலபுரம், புதுக்கோட்டை என்ற முகவரியில் 30.06.2020-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 04322-222187 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 7401703498 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.