புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சூரிய கிரகணம் மற்றும் கோடைகால நீண்ட பகல் நாள் விளக்க நிகழ்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டை மாவட்டக் கிளை சார்பில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் க.சதாசிவம் தலைமையில் நடைபெற்றது.

சூரியக்கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமிக்கிடையில் சந்திரன் சூரிய ஒளியை மறைப்பதால் நிலவின் நிழல் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் விழுவதாகும். இது ஓர் அறிவியல் பூர்வ இயற்கை நிகழ்வாகும். இதனால் பொதுமக்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வழக்கம் போல வெளியில் வந்தாலோ, தண்ணீர் அருந்தினாலோ, உணவு உண்ணுவதாலோ எந்த வித பாதிப்பும் ஏற்படும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏதுமில்லை.

எனவே வழக்கம்போல அவரவர் பணிகளை மேற்கொள்ளலாம். இதில் தனிநபர் இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்தும் பாதுகாப்பாக தொலைநோக்கி, சூரியக் கண்ணாடிகள் கொண்டும் அனைத்து ஒன்றியங்களிலும் அவரவர் வீடுகளில் இருந்தும் பார்த்தனர்.

மேலும் இன்று கோடைகால நீண்டபகல் நாளாகும். காலை 5.44 முதல் மாலை 6.38 வரை பகல் நேரமாகும். மொத்த பகல் நேரம் 12 மணி 54 நிமிடங்கள் ஆகும்.

மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தொலைநோக்கி கொண்டு கிரகணத்தை பார்க்கும் நிகழ்வை மாநில செயற்குழு உறுப்பினர்கள் லெ.பிரபாகரன், அ.மணவாளன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அறிவியல் இயக்க முன்னாள் மாநில செயலாளர் ஆர்.விவேகானந்தன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார், நேரு யுவகேந்திரா கணக்காளர் ரெ.நமச்சிவாயம், அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் மா.குமரேசன், மாவட்ட இணைச்செயலர் டி.விமலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மாவட்டத் துணைத் தலைவர் எம்.வீரமுத்து நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 + = 50