நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்ற போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நண்பகல் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர், போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாமல் ரகசியமாக வைத்த காவல்துறையினர் ரஜினிகாந்த் இல்லத்தில் ஆய்வு நடத்தினர். அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லாததால் புரளியை கிளப்புவதற்காக இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் காவல்துறையினர் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு அழைத்த தொலைபேசி எண்ணை வைத்து புரளியை கிளப்பிய நபரை கைது செய்ய தீவிரம் காட்டினர்.
மேலும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன் மிரட்டல் விடுத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பள்ளி மாணவன் மற்றும் அவனது தாயாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவனது தாய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தான் கேட்டது கிடைக்காவிட்டால் செல்போனை வைத்து கொண்டு இதுபோல் மிரட்டல் விடுப்பதை மாணவன் வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரிய வந்தது.
அவனது செல்போனில் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும், 108 எண்ணுக்கு அழைத்து மிரட்டல் விடுத்தது விசாரணையில் உறுதியானது. இதனை தொடர்ந்து, பள்ளி மாணவனுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.