நொய்யல் நதியில் கழிவுகள் மற்றும் கழிவு நீர் கலக்கபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கபடும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நீர்நிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், நொய்யல் நதியில் கழிவுகள் மற்றும் கழிவு நீர் கலக்கபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கபடும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை திருப்பூர் ஈரோடு மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 158 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் நொய்யல் நதியை 230 கோடி ரூபாயில் தூர்வாருதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணியை தமிழக முதல்வர் கடந்த வாரம் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து நொய்யல் நதி தூர்வாரும் பணி இன்று காலை ஆலந்துறை அருகே உள்ள சித்திரைச்சாவடி அணைக்கட்டில் நடைபெற்றது. இதனை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி கலந்துகொண்டு தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த அவிநாசி அத்திக்கடவு நீர் செறிவூட்டும் பணியை ஆரம்பித்த தமிழக முதல்வர் அடுத்த கட்டமாக 100 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்த நொய்யல் நதியை தூர்வார 230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 174 கோடி ரூபாய்க்கு நொய்யல் நதியை தூர்வார உள்ளதாக தெரிவித்த அவர் நீர்நிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நொய்யல் நதியில் கழிவுகள் மற்றும் கழிவு நீர் கலக்கபடுவது தொடர்பாக கண்காணிப்பு மேற்கொள்ளபட்டு நடவடிக்கை எடுக்கபடும் எனவும் தெரிவித்தார். இதனிடையே நொய்யல் தூர்வாரும் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி ஏதுமின்றி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 3 =