கேரளாவில் சோகம் : ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது.

கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் கேரள அரசு ஆன்லைனின் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. மாணவர்கள் வீடுகளில் இருந்தே குறிப்பிட்ட்ட தொலைக்காட்சி சேனல் மூலமாகவும், இணையத்திலும் வகுப்புகளை கவனிக்க பிரத்யேக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் டிவி பழுதானதால் ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத 10ம்வகுப்பு மாணவி தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மலப்புரத்தில் உள்ள வலஞ்சேரியில் வசித்து வரும் 10ம் வகுப்பு மாணவி படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். அவர் வீட்டில் இருந்த டிவி பழுதாகிவிட்டதால் ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியாமல் போயுள்ளது. வகுப்பை ஆன்லைனில் பார்க்கலாம் என்றாலும் அவர் வீட்டில் உள்ள ஒரு தொலைப்பேசியில் சார்ஜ் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வீட்டிற்கு அருகே தீயில் காயமடைந்த மாணவியைக் கண்ட அவரது அம்மா கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கூலித்தொழிலாளியான மாணவியின் தந்தைக்கு தற்போது வேலை இல்லை என்பதால், வீட்டில் பழுதான டிவியை சரி செய்ய முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் டிவி செல்போன் இல்லாத மாணவர்களுக்கும் சென்றடையும் விதமாக ஆன்லைன் வகுப்புகள் இருக்க வேண்டுமென்றும், அதற்கு அரசு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் 10-ம் வகுப்பு மாணவியின் உயிரிழப்பு கேரளாவில்  அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார்.

பொது முடக்கம் காரணமாக கேரளாவில் ஜூன் 1-ம்தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. டிவி மூலமாகவும் பாடம் கற்பித்து தரப்படுகிறது. இருப்பினும் மாநிலத்தில் 2.50 லட்சம் அளவுக்கு மாணவ, மாணவிகள் டிவி அல்லது இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்த முடியாத சூழலில் இருக்கின்றனர். இதற்காக மையங்களை ஏற்படுத்தி தருவதற்கு அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 

இந்நிலையில் கேரளாவில் மொத்தம் 1,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணம் அடைந்தவர்கள், மரணித்தவர்களை தவிர்த்து மாநிலத்தில் தற்போது 708 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்டவரின் தாய்க்கு சில  வாரங்களுக்கு முன்புதான் இன்னொரு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 4