கடைமடைப் பாசனப் பகுதிக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும் – காங்கிரஸ் கட்சி கோரிக்கை 

சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதிகளுக்கு, பாசனத்திற்கு தண்ணீர் வருவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இப்றாகிம் ஷா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஜூன் மாதம் 12 ஆம் தேதி அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பாசனதாரர்கள் சங்கம் மூலம் நடைபெற உள்ள பணிகளை ஆற்றில் தண்ணீர் வருவதற்குள், போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ஆளுங்கட்சி தலையீடு இல்லாமல், நேர்மையான முறையில், முறைகேடின்றி பணிகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர், மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும். 

கடைமடைப் பகுதி பாசன வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களில் கஜா புயலின் போது சாய்ந்த மரங்கள் சில இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதியை சென்றடைவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்துவதோடு, கரைகளை பலப்படுத்தி, துருசுகள், ஷட்டர்கள் ஆகியவற்றை சரி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடப்பட்ட போது, கரை உடைப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

கடைமடைப் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க்கால்களைத் தூர்வாரி பாசனத்திற்காக தண்ணீர் நிரப்பித் தர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 8 =