பள்ளிகளை மறந்த பிள்ளைகளுக்கு வாட்ஸப் குழு அமைத்து வகுப்பெடுக்கும் காரைக்குடி பள்ளி ஆசிரியை

பிள்ளைகள் பள்ளிகளை மறந்து மூன்று மாத காலம் ஆகிறது. படித்தலை விட்டுவிட்டு செல்போன் விளையாட்டுகளுடனும், டிவி சினிமாக்களுடனும் பொழுது கழிக்க தொடங்கி இருக்கின்றனர். இச்சூழலில் 32 பள்ளிகளைச் சேர்ந்த 68 மாணவர்களுடன் “தேவதைகள் கூட்டம்” என்னும் வாட்சப் குழு தொடங்கி, கல்வி மற்றும் கல்வி சார் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்து அசத்தி வருகிறார் காரைக்குடி பள்ளி ஆசிரியை கவிஞர் பா.தென்றல்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் கவிஞர் பா.தென்றல், அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் என தொடந்து எழுதி வருகிறார்.

“உயிர் பருகும் மழை” என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். “நீசமாக எண்ணாதே, நீச்சலடிக்கக் கற்றுக் கொடு” என்னும் இரண்டாவது நூல், கட்டுரைத் தொகுப்பாக விரைவில் வெளியிட இருக்கிறார்.

இந்நிலையில்தான் “தேவதைகள் கூட்டம்” என்ற பெயரில் கடந்த ஓராண்டாக உள்ளூரில் பல பள்ளிக் குழந்தைகளை ஒருங்கிணைத்து, அவருடைய வீட்டில் மாதம் ஒரு முறை கதை சொல்லும் கூட்டம் நடத்தி வருகிறார். கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டுப் பள்ளி விடுமுறையும் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவும் அறிவிக்கப்பட்டதும், குழந்தைகளை எப்படிச் சந்திப்பது? என்று கவலை கொண்ட இவருக்கு, புதிதாக வேறு ஒரு யோசனையும் உதித்திருக்கிறது.

அதாவது பள்ளி குழந்தைகளின் அலைபேசி எண்களை இணைத்து,”தேவதைகள் கூட்டம்” என்ற வாட்ஸப் குழுவினை உருவாக்கி கல்வி தொடர்பான விஷயங்களை மாணவர்களுக்கு அளித்து வருகிறார். அவருடைய தன்னலமற்ற இந்த பணிக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுபற்றி கவிஞர் பா.தென்றலிடம் பேசினோம்..

“ தொலைக்காட்சி, அலைபேசி மற்றும் கணினியைக் குழந்தைகள் தொடர்ந்து நீண்ட நேரம் பயன்படுத்துவதை விடுத்துத் தினமும் சிறிது நேரம் அறிவுப் பூர்வமான, வேடிக்கையான மற்றும் பொழுதுபோக்கான செயல்பாடுகளில் ஆர்வத்துடன்  ‘தேவதைகள் கூட்டம்’- வாட்ஸப் குழுவில் பிள்ளைகள் தங்களை இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்சி எனக்கு. 

படம் வரைதல், கணக்குப் போடுதல், கோலம் / ரங்கோலி, விடுகதைகளுக்கு விடை காணுதல், கூட்டுச் சொற்களைப் பொருத்துதல், அகர முதலி வரிசைப்படி சொற்களை அமைத்தல், சொற்றொடரில் அமைத்து எழுதுதல், புதிய சொற்கள் அறிதல் (ஆங்கிலம்), தமிழிலிருந்து ஆங்கிலத்தில் சிறிய சொற்றொடரை மொழி பெயர்த்தல், கவிதை எழுதுதல்,கழிவுப் பொருள்களைப் பயன்படுத்திப் புதிய பொருள்கள் செய்தல், குரல் வழிச் செய்தியில் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி எனப் பல்வேறு செயல்களைச் செய்து தங்கள் பொழுதினைப் போக்காமல், புதுமையாக ஆக்கி வருகின்றனர்.

இதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பால், எனது நட்பு வட்டத்தில் குழந்தைகள் உள்ள நண்பர்களின் அலைபேசி எண்களை இணைத்து, “தேவதைகள் கூட்டம்   2” என்ற இரண்டாவது குழுவினையும் உருவாக்கினேன். இங்கும் நல்ல வரவேற்பும் ஒத்துழைப்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி.

32 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் 68 பேர் பல்வேறு ஊர்களிலிருந்தும் கலந்து  கொள்கிறார்கள். LKG முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை செயல்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு முடிந்து நாடு சகஜ நிலைக்குத் திரும்பியதும் விழாக்கள் நடத்த அரசு அனுமதி அளித்த பிறகு ஒரு நாளில் கூட்டம் நடத்தி, கலந்து கொண்ட அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருக்கிறேன்.

செயல்களைத் திட்டமிடுதல், எழுதுதல், குழுவில் பதிவிட்டு, தொடர்ந்து ஊக்குவித்தல், மதிப்பிடுதல், பதிவேட்டில் குறித்துக் கொள்ளுதல், ஐயங்கள் கேட்கும் குழந்தைகளுக்கு அவற்றைத் தீர்த்து வைத்தல் என ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் எனக்குச் செலவாகிறது. இருப்பினும் குழந்தைகளுக்கு நல்வழி காட்டுகிறோம் என்ற மனநிறைவு ஏற்படுகிறது. எனவே தொடர்ந்து வாட்ஸப் செயலி குழுக்கள் வழியாக மகிழ்ச்சியாகக் கற்பித்து வருகிறேன்.

மாணவர்களின் கற்றல் வெளிப்பாடு நாளுக்கு நாள் மேம்படுகிறது. ஆனால் பாடப்புத்தகங்கள் எதனையும் பின்பற்றுவதில்லை. திறன் மையக் கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

எனவே, அடிப்படையான மொழித் திறன்கள் மேன்மையடைய விளையாட்டு வழியிலும், செயல்பாடுகள் வாயிலாகவும் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தாங்கள் நேரில் சந்தித்திராத புதிய  ஆசிரியர் ஒருவருடன் பயணிக்கிறோம் என்பதே பல குழந்தைகளுக்கும் புதிய அனுபவமாக இருக்கிறது. எனவே பயமும் தயக்கமும் இன்றிப் பேசுகின்றனர்.

குறுஞ்செய்திகள் மற்றும் ஒலிச்செய்திகள் மூலம் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். வழிமுறைகளையும் ஐயங்களையும் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். ஆசிரியர் மாணவர்களுக்கிடையில் நட்பும், நல்லுறவும் நாளும் வளர்கின்றன. பேசுதல், எழுதுதல், வரைதல், பாடுதல், செயல் திட்டங்களில் பங்கேற்றல் ஆகிய திறன்கள் வளர்க்கப்படுகின்றன.

சிந்தித்தல், கற்பனைத் திறன், வினா எழுப்புதல், அழகுணர்திறன், ஆக்கத்திறன், உளவியல் மனப்பான்மைகள், நேர்மறை மனவெழுச்சிகள், கற்றலில் நாட்டம் ஆகியவை மேலும் வளர்கின்றன. ஓய்வு என்றால் பகலில் தூங்குதல், தொலைக்காட்சி பார்த்தல் என்ற எண்ணம் குழந்தைப் பருவத்திலேயே ஏற்பட்டுவிடக் கூடாது.

அறிஞர்  அண்ணா கூறியது போல், ஓய்வெனப்படுவது, ஒரு வேலை செய்வதிலிருந்து வேறோர் செயலுக்குத் தன்னை மாற்றிக் கொள்வது என்பதை உணர்த்த விரும்புகிறேன். ஆதலால் தான் எனக்களிக்கப்பட்ட பள்ளி விடுமுறையிலும் நான் ஓய்வெடுக்காமல் மாணவர்களுக்காக உழைக்கிறேன்.” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார் கவிஞர் பா.தென்றல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 57 = 67