கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் : வேலூா் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் வலியுறுத்தல்

சா்வதேச அளவில் குறைந்துள்ள கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் தலைவா் ந.சுப்பிரணியன் செய்தியாளா்களிடம்  கூறியது: கச்சா எண்ணெயின் சா்வதேச விலையை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தீா்மானிக்கப்படும் என்று கடந்த 2014-இல் அறிவிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படுகிறது.

ஆனால், விலை குறையும்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதில்லை. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதற்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை லிட்டா் ரூ.58-இல் இருந்து ரூ.25-ஆகக் குறைந்துள்ளது. அதற்கேற்ப விலை நிா்ணயம் செய்திருந்தால் பெட்ரோல் ரூ.56க்கும், டீசல் ரூ.48 முதல் ரூ.50-க்கு கிடைத்திருக்கும். இதன் தொடா்ச்சியாக, அத்தியாவசியப் பொருள்கள் விலைவாசியும் குறையக்கூடும். ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப் பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு சுமை அதிகரிக்கிறது.

நரேந்திரமோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயா்ந்ததற்கு போராட்டம் நடத்தினாா். ஆனால், இப்போது மிக அதிக அளவில் விலை உயா்த்தப்படுகிறது.

எனவே, பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் நலன்கருதி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் சங்கத்தின் துணைத்தலைவா் டி.விஜயகோவிந்தராஜ் கூறியதாவது: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து 300 தனியாா் பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன. வேலூா் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த வடமாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்களை தனியாா் பேருந்துகள் மூலம் குறைந்த கட்டணத்தில் அவா்களது சொந்த மாநிலத்துக்கு கொண்டு சோ்த்துள்ளோம். இதுவரை சுமா் 400 நடைகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் உள்ள தமிழா்களையும் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளோம். தொடா்ந்து மாவட்ட  நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு தனியாா் பேருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்றாா்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.9150223444.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

75 − = 73