அம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் பகுதியில் அம்பன் புயல் காரணமாக வீசிய சூறை காற்றில் சுமார் 12 ஆயிரம் வாழைகள் சேதமாகியுள்ளது. ஆதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பான் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதையொட்டி பல இடங்களில் வாழைகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் இந்த சூறாவளி காற்றினால் சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் பேய்க்குளம், மீரான்குளம், சேரக்குளம், உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 12 ஆயிரம் வாழைகள் சரிந்து  பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பேய்க்குளம் முருகேசன் என்பவரது தோட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம்  வாழைகளும், மீரான்குளம் கோயில்ராஜ் என்பவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 1000 வாழைகள், சேரக்குளம் ராமர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 400 வாழைகள் உள்ளிட்ட பல விவசாயிகளின் வாழைகள்  சேதமாகியுள்ளது. 

இந்த  பொது முடக்கத்தையொட்டி பல இன்னல்களுக்கிடையே பயிரை பாதுகாத்து வந்த விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சேதமான வாழைகளை ஆழ்வார், திருநகரி வட்டார வேளாண்மை அலுவலர்கள், பேய்க்குளம் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து மாவட்ட கடலை விவசாயிகள் சங்கத் தலைவர் முருகேசன் கூறுகையில், தற்போது  கொரோனா  பொது முடக்கத்தால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். விவசாயிகளும் கடும் பாடுபட்டு விவசாயத்தில் பயிர்களை  விளைவித்து அதன் விளை பொருள்கள் விற்பனைக்கு  கொண்டு செல்ல கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் அம்பன் புயலால் ஏற்பட்ட சூறாவளி காற்றில் பல வாழைகள் சேதமடைந்துள்ளது மிகவும் வேதனை தரும் வகையில் உள்ளது. ஆதலால் விவசாயிகளை வேதனைகளை கணக்கில் கொண்டு தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை  உடனடியாக  வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 − = 14