கொரோனா எதிரொலி : பல கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலால், நாட்டில், 6 முதல் 13 கோடி மக்கள் வரை, தங்களுடைய வேலையை இழப்பர்’ என, கணிக்கப்பட்டுள்ளது. ‘தொழிற்சாலைகளில் இருந்து, பிளாட்பார தொழில் வரை, இந்த பாதிப்பு இருக்கும்’ என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், நம் நாட்டிலும் அதன் வீரியத்தை காட்டிஉள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க, மார்ச், 25 முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. தற்போது சில தொழில்களில், வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை இருந்தாலும், அவற்றின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்கள் ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், அவை எப்படி மீண்டு எழப்போகின்றன என்பதை பொறுத்தே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும். தற்போதைய சூழ்நிலையில், ‘நாட்டில், 6 முதல் 13 கோடி பேர் வேலைவாய்ப்பை இழப்பர்’ என, நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு பாதிப்பு, வருவாய் பாதிப்பு என்பது, தொழிற்சாலைகளில் இருந்து, பிளாட்பார கடைகள் வரை என, அனைத்து துறைகளிலும் இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், தினக் கூலிகள். ஊரடங்கால், ஏற்கனவே கடும் சிரமத்தை சந்தித்த இவர்கள், அடுத்து வரும் மாதங்களிலும், அது போன்ற நிலையையே சந்திக்க நேரிடும். தொழில்கள் முழுமையாக தலைதுாக்கும் வரையில், வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும்.

ஊரடங்கின்போது ஆட்டோ ஓட்டுனர்கள், ரிக் ஷா ஓட்டுனர்கள், வாடகை கார் ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களுக்கு இவர்களுடைய சேவை குறைவாகவே இருக்கும். அதனால், பலருக்கு வேலை இருக்காது; இருந்தாலும், வருமானம் குறைவாக இருக்கும்.

சாலையோர பிளாட்பாரங்களில் உணவு தயாரித்து விற்பவர்களின் பாடு, மிகவும் மோசமாகும். வைரஸ் அச்சம் மக்களிடையே இன்னும் சிறிது காலத்துக்கு கண்டிப்பாக இருக்கும். அதனால், பிளாட்பார கடைகளில் சாப்பிடுவதை தவிர்ப்பர். இது போன்ற நிலையே, தெருவோர லாண்டரி, அயர்ன் கடைகளின் நிலைமையும். வீடுகளில் பணியாற்றும் சமையல்காரர்கள், உதவியாளர்கள், குழந்தையை பார்த்துக் கொள்வோர் என, பல்வேறு தரப்பினருக்கும் வேலை பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2