மக்கள் துயரமான நேரத்தில் ரசிகர்கள் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் : நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

ரசிகர்கள் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்” என்று நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் சமீபத்தில் பிரதமர் மற்றும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கும் சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கும் நிதி வழங்கினார். 

இந்த நிலையில் வருகிற மே 1-ந்தேதி அஜித்குமாரின் பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். அஜித்குமார் ஏற்கனவே ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது இல்லை.

ஆனாலும் வருடந்தோறும் அவரது பிறந்த நாளன்று ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தற்போது அஜித்குமார் பிறந்தநாளையொட்டி பிரத்யேகமாக டுவிட்டர் முகப்பு போஸ்டரை வடிவமைத்து அதை நடிகர்கள் அருண் விஜய், சாந்தனு, ஆதவ் கண்ணதாசன், பிரேம்ஜி, ராகுல்தேவ், நடிகைகள் ஹன்சிகா, பிரியா ஆனந்த், ரைசா வில்சன், பார்வதி நாயர், ஆர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் மூலம் வெளியிட ஏற்பாடுகள் செய்தனர்.

இதற்கு அஜித் தரப்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆதவ் கண்ணதாசன், சாந்தனு ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில், “அஜித்குமார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. தனது பிறந்த நாளில் பொதுமுகப்பு படங்களை சமூக வலைத்தளத்தில் வைப்பது மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று அஜித்குமார் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனர். இதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் கூறினர்.

அஜித் கனிவோடு விடுத்த வேண்டுகோளை ஏற்போம் அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுப்போம்” என்று பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து அஜித் தரப்பில் கூறும்போது, “கொரோனா பாதிப்பினால் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று அஜித்குமார் கேட்டுக்கொண்டார். அதை நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் தெரிவித்து உள்ளோம்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 − = 33