ஊரடங்கால் திறக்கப்படாத சலூன்கள் : பிள்ளைகளுக்கு முடிவெட்டும் பெற்றோர்

சலூன் கடைகள் எதுவும் திறக்கப்படாததால் பெற்றோரே பிள்ளைகளுக்கு முடிவெட்டி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக இந்தியா முழுவதும் மே-3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் கடைகள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு வருகின்றன.

ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு புதுக்கோட்டை பகுதியில் உள்ள சலூன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சலூன் கடைகளில் முடிவெட்டுதல், சவரம் செய்தல், டை அடித்தல் போன்ற வேலைகளை வாடிக்கையாளரின் மிகஅருகில் நின்றுதான் செய்ய முடியும். இதனால்  கொரோனா தொற்று மிக வேகமாக பரவும் சூழல் உள்ளதால் சலூன் கடைகளை திறக்க வேண்டாம் என்று முடிதிருத்துவோர் சங்கமும், அரசும் அறிவுறுத்தி உள்ளது. இதனால் மார்ச்-24 முதல் சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் முடிவெட்டுதல், சவரம் செய்தல், டை அடித்தல் போன்றவற்றை செய்துகொள்ள முடியாமல் பொதுமக்கள் தாடி, மீசை, ஒழுங்குபடுத்தாத தலைமுடி இவைகளுடன் தவித்து வருகின்றனர். முகச் சவரத்தைக்கூட பெரும்பாலானோர் சுயமாகவே வீட்டில் செய்துகொள்கின்றனர். ஆனால் முடிவெட்டுவது, டை அடிப்பது போன்றவைதான் எல்லோருக்கும் இயலாத காரியமாக உள்ளது. அதனால் ஊரடங்கு முடிந்து எப்போது சலூன் கடைகள் திறக்கப்படும் என்று மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். சலூன் கடைகாரர்களும் வருமானம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த கோடைகாலத்தில் கூடுதலாக தலை முடி இருப்பதால் வியர்வை, ஜலதோஷம், அரிப்பு, வெயில் கட்டிகள் போன்றவை ஏற்பட்டு தொந்தரவு செய்து வருகின்றன. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கூடுதல் தலை முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பல இடங்களில் பெற்றோரே தங்களின்  பிள்ளைகளுக்கு முடிவெட்டும் பணியில் இறங்கி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் பல வீடுகளில் பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்கு முடிவெட்டியும், மொட்டை அடித்தும் வருகின்றனர். திருவரங்குளத்தில் கணேஷ் என்பவர் தனது பிள்ளைகளுக்கு தானே முடிவெட்டி விடுகின்றார்.

இது பற்றி அவர், ” தற்போது அதிகமான வெயில் காரணத்தால் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சளி பிடித்து காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் வேறு வழி தெரியாமல் நாங்களே எங்கள் பிள்ளைகளுக்கு முடிவெட்டி விடுகிறோம் ” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

90 − 88 =