திருச்சியில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 32 பேர் : கலெக்டர், டாக்டர்களின் கை தட்டலுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

திருச்சியில் கொரோனா தொற்று நோய்க்கான சிகிச்சையில் குணம் அடைந்த 32 பேரை அரசு மருத்துவமனையில் இருந்து  திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மற்றும் மருத்துவர்கள் கை தட்டலுடன்  வீடுகளுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர்.

திருச்சி மாவட்டம் மற்றும் ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 43 பேர் திருச்சி  மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பு சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.

 அவர்களில், ஈரோட்டைச் சேர்ந்த 24 வயது வாலிபர் குணம் அடைந்ததால் கடந்த 10ம் தேதி டிஸ்சார்ஜ் செய்து அடுத்து வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் மூலம் குணமடைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 3 பேர்  மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஆம்புலன்ஸ் மூலம் வீடுகளுக்கு  அனுப்பி வைக்கப்பட்ட  அவர்களை மாவட்ட கலெக்டர் சிவராசு, அரசு மருத்துவமனை டீன் வனிதா மற்றும் சிறப்பு வார்டு டாக்டர்கள், செவிலியர்கள்,மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர்  உற்சாகமுடன் கை தட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். மேலும் கொரோனா பரிசோதனையில், தொற்று இல்லை என அறிக்கை பெறப்பட்ட 61 பேரும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும், 28 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.இதுதவிர, மேலும் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 8 = 1