கேரள சோகம் : உடல்நலம் பாதித்த தந்தையை 1 கிமீ தோளில் சுமந்து சென்ற மகன்

கேரளம் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவால் ஆட்டோவில் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில்,  உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலம் பெற்றதை அடுத்து அவரை வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து அவரை, மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், ஆட்டோவை வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாகவே தடுத்து நிறுத்திய போலீஸார்,  ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக இதற்கு மேல் ஆட்டோ செல்ல அனுமதிக்க முடியாது என கூறினர். 

இதனையடுத்து வேறு வழியில்லாத நிலையில், நடக்க முடியாத நிலையில் இருந்த 65 வயதுடைய தந்தையை ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்தே வீட்டிற்கு கொண்டு சென்றார் அவரது மகன். அப்போது அவரது தாயாரும் நடந்தே உடன் சென்ற காட்சி பார்ப்போரின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.  

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஊரடங்கு விதிமுறைகளை காரணம் காட்டி ஆட்டோ தடுத்து நிறுத்தப்பட்டாலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்வதற்கு ஆட்டோவை அனுமதித்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 14 = 15