திருவண்ணாமலையில் ஆதரவில்லாமல்,சாலையில் பசியால் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டியை தன்னுடைய காரில் ஏற்றிவந்து சிறப்பு முகாமில் சேர்த்து உதவி செய்த மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.
ஊரடங்கு உத்தரவால் இந்தியாவே வீட்டிற்குள் முடங்கி உள்ளது. இதனால் விளிம்பு நிலை மக்களும்,ஆதரவற்றோரும் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். அவர்களின் துயரத்தைப் போக்க மாநில அரசும், சமூக நல அமைப்பினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட மக்களின் குறைகளைப் போக்கவும், ஊரடங்கு உத்தரவை யாரும் மீறாமல் இருப்பதற்கும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினசரி பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் இன்று கலெக்டர் கந்தசாமியின் கார் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது வயதான மூட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் தரையில் உட்கார்ந்து பசியால் துடித்து அழுது கொண்டிருந்தார். இதனைக் கண்ட கலெக்டர் கந்தசாமி அந்த மூதாட்டியின் அருகில் காரை நிறுத்தச் சொன்னார். காரை விட்டு இறங்கிய கலெக்டர் அந்த மூதாட்டியிடம் விசாரித்துள்ளார். அப்போது தனக்கு யாரும் ஆதரவில்லை என்றும் பசியால் தவித்து வருவதாகவும் அந்த மூதாட்டி கண்ணீருடன் கூறினார். இதனைக் கேட்டு துயரம் அடைந்த கலெக்டர் கந்தசாமி அவருக்கு ஆறுதல் கூறி, தன்னுடைய காரிலேயே அவரையும் ஏற்றிக் கொண்டு அங்குள்ள சிறப்பு முகாமில் கொண்டு போய்ச் சேர்த்துள்ளார்.
சிறப்பு முகாமில் அந்த மூதாட்டிக்கு தலையணை, தரை விரிப்பு , போர்வை ,சோப்பு , பேஸ்ட் , பிரஷ், உணவு ஆகியவற்றை வழங்கி மேலும் சிறப்பு முகாமில் தங்கியுள்ள அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் உடனடி ஏற்பாடு செய்தார். தக்க நேரத்தில் உதவி செய்த மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு அந்த மூதாட்டி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியின் இந்த தாயுள்ள நடவடிக்கையை ஒட்டுமொத்த மாவட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர். இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.