ஊரடங்கு நீட்டித்தாலும், தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய, மாநில அரசுகள், ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. சிறு வியாபாரிகள் மூலமாகவும், ரேஷன் கடைகள் மூலமாகவும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டாலும், உணவு தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சத்தில் தான் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டாலும், அரசி தட்டுப்பாடு ஏற்படாது, என்று திருச்சி அரிசி ஆலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் சிவானந்தன் கூறுகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், குறைவான தொழிலாளர்களை கொண்டு, அரிசி ஆலை போன்ற அத்தியாவசிய உற்பத்தி நிறுவனங்களை செயல்படுத்தலாம், என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அதனால், அரிசி ஆலைகள், எவ்வித தடங்கலும் இல்லாமல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட சில நாட்கள் மட்டுமே, சரக்கு போக்குவரத்தில் சிக்கல் இருந்தது. ஒரு சில நாட்களில், போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் மையங்கள் முறைப்படி அனுமதி வழங்கப்பட்டதால், நெல் எடுத்து வருவதிலும், வியாபாரிகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்புவதிலும் சுணக்கம் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு, முழுமையாக ஆற்றுப் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில், நெல் விளைச்சல் நன்றாக இருந்தது.

ஜனவரி மாதம் துவங்கிய நெல் அறுவடை பணிகள் இந்த மாதம் தான் முடிந்துள்ளது. வியாபாரிகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், தட்டுப்பாடு இல்லாமல், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆலைகளில், அரிசி உற்பத்தியும் தொடர்ந்து நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு, ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி இருப்பில் உள்ளது. சில கட்டுப்பாடுகளுடன், வெளி மாநிலங்களுக்கு இடையேயான தடையை தளர்த்தி, நெல் வரத்துக்கு வழிவகை செய்தால், அரிசி உற்பத்தி வழக்கமான நிலைக்கு வந்து விடும் எனவும் விலை உயர்வு ஏற்படவும் வாய்ப்பு இல்லை எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 − = 85