புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருநங்கைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி உதவி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கினால் அனைவரும் பல்வேறு சிரமங்களை  எதிர்நோக்கி உள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உணவுப் பொருட்கள் வழங்கி உதவி செய்தனர்.

கொரோனா பாதிப்பினால் ஒட்டுமொத்த உலகமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல்களும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்கள் முதல் அனைவருமே துயரத்தை எதிர்நோக்கி உள்ளனர். இதில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளின் வாழ்க்கைத் துயரம் சொல்லி மாளாது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நூற்றுக்கணக்கான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒருவேளை உணவுக்குகூட வழி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், அதனால் அவர்களுக்கு பொதுமக்களும், சமூகநல அமைப்பினரும் உதவிசெய்து உதவுமாறு புதுக்கோட்டை திருநங்கைகள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரெ.ஷிவானி சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர்கள், அவர்களுக்கு சில நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், முட்டை போன்ற உணவுப் பொருட்களை  சமூக விலகல் அடிப்படையில் வழங்கினர். இதனை புதுக்கோட்டை திருநங்கைகள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரெ.ஷிவானி தலைமையில் திருநங்கைகள் பெற்றுக் கொண்டனர்.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  மாவட்டச் செயலாளர் நியாஸ், பொருளாளர் அன்சாரி, செய்தித் தொடர்பாளர் கலையரசன், ஊடகப் பிரிவுச் செயலர் அசன், சித்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக  புதுக்கோட்டை திருநங்கைகள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரெ.ஷிவானி ‘புதுகை வரலாறு’ இடம் கூறியதாவது :-

“ இந்த துயரமான கொரோனா காலத்தில் எமது திருநங்கைகள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறோம். ஒருவேளை உணவுக்குகூட  வழி இல்லாமல் எமது திருநங்கைகள் தவித்து வருகின்றனர். இன்னும் இந்த ஊரடங்கு தடைகாலம் முடியும் வரையில் நாங்கள் எப்படி வாழப்போகிறோம் என்றே தெரியவில்லை. இன்று உணவுப் பொருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களையும் சக மனித உயிர்களாக நினைத்து இந்த இக்கட்டான நேரத்தில் அனைவரும் உதவி செய்து பாதுகாத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்..” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

59 − 52 =