மு.க.ஸ்டாலினிடம் மோடி, அமித்ஷா தொலைபேசியில் நலம் விசாரிப்பு : தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசி மூலம் அடுத்தடுத்து தொடர்பு கொண்டு பேசினர்.இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடியிடம் இருந்து இன்று நண்பகல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  தொலைபேசி அழைப்பு  வந்துள்ளது.. மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் அழைத்த பிரதமர் மோடி, ‘ஹவ் ஆர் யூ ஸ்டாலின் ஜீ..’ என கனிவுடன் நலம் விசாரித்திருக்கிறார். மேலும், ஸ்டாலினிடம் தயாளு அம்மையார் உடல்நலம் பற்றியும் கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி.

 தாமும் தன்னுடைய குடும்பத்தினரும் நலமுடன் இருப்பதாக கூறிய ஸ்டாலின், பதிலுக்கு பிரதமரிடம் அவரது உடல்நலம் பற்றி விசாரித்துள்ளார். இப்படி பரஸ்பர நலம் விசாரிப்புகள் முடிந்த பின்னர், கொரோனா விவகாரத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் மத்திய அரசு அரணாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் ஸ்டாலின்.

அதைக்கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, மத்திய அரசு மிக கவனமுடன் செயல்பட்டு வருவதாகவும், கொரோனாவில் இருந்து மக்களை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் 8-ம் தேதி மத்திய அரசு நடத்தும் நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் திமுக உறுதியாக பங்கேற்கும் என்றும், டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பார் எனவும் உறுதியளித்துள்ளார் ஸ்டாலின். மேலும், இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை திமுக வழங்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் அழைத்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர்.

பிரதமர் மோடியை போலவே தானும் வழக்கமான நலம் விசாரிப்புகளை மேற்கொண்டிருக்கிறார் அமித்ஷா. பதிலுக்கு அமித்ஷா உடல்நலம் பற்றி ஸ்டாலினும் கேட்டறிந்தார். இதனிடையே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசிய விவகாரம் தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + = 4