கொரோனாவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்: ஸ்டாலின்

கொரோனா பரவல் குறித்து தலைவர்கள் பலரும் காணொலி மூலம் பேசி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் என் அன்பான வணக்கம் என தொடங்கும் அந்த காணொலியில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுடைய குறைகளை அரசாங்கத்துக்கு சொல்லும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. ஆட்சியில் இருக்கும் அதிமுகவிற்கு கெட்ட பெயர் வந்தால் வரட்டும் என்று நாங்கள் இருக்க முடியாது ஆனால், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அன்றாடம் மக்களை நேருக்கு நேராகச் சந்தித்தே பழக்கப்பட்டவன் நான். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாம் அனைவருமே இப்போது தனித்து இருந்தால்தான் கொரோனா வைரஸைக் வெல்லவும் முடியும் என ஸ்டாலின் காணொலியில் பேசியுள்ளார்.

கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சென்னையில் கலைஞர் அரங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும், மற்ற ஊர்களில் உள்ள திமுக கட்டிடங்களும் மக்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும், அதுமட்டுமில்லாமல், முககவசம் உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு தரும் வேலையை திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதியினர் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே இவர்களிடம் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டிருப்பதாகவும், ஒவ்வொருவரும் என்ன சேவைகள் செய்தார்கள் என்று என்னிடம் சொல்லி வருகிறார்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கு மட்டுமில்லாமல் உலகப் பிரச்சினையாக இருக்கிறது. வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களை மட்டும் பரிசோதனை செய்தால் போதாது. வருமுன் காப்பதுதான் சரியானது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கொரோனா பரிசோதனை செய்வதற்கு அதிக கட்டணம் வாங்குவதாகச்வும் அந்த கட்டணத்தைக் குறைக்கவும், பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என கூறியவர், அரசு மருத்துவமனைகள் போல, தனியார் மருத்துவமனைகளையும் தயார்ப்படுத்தி, செயற்கைச் சுவாசக் கருவிகள் கொண்ட படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் இதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும், இதனை, மத்திய அரசு, போர்க்கால அடிப்படையில உற்பத்தி செய்து மாநிலங்களுக்குத் தர வேண்டும் என ஸ்டாலின் பேசியுள்ளார்.

கொரோனா சுகாதாரப் பேரிடரோ, பொருளாதாரப் பேரிடரோ அல்ல மிகப்பெரிய சமூகப் பேரிடராகவும் மாறிவிட்டது, மக்கள் இதனை அனைவரும் உணர வேண்டும். முதலில் தமிழக அரசு உணர வேண்டும். ஏதோ சலுகைகள் அறிவித்தோம், அதோடு தங்கள் கடமை முடிந்ததாக நினைத்துவிடக் கூடாது. ஒவ்வொரு அறிவிப்பும் கடைசி மனிதனையும் போய்ச் சேர்ந்ததா என்பதைச் சரிபார்க்க வேண்டும். கிராமப்புறங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. அதனால் மாநிலம் முழுவதும் ஒரே விலையை அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதையும் அரசு நிவர்த்தி செய்திட வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்குச் சம்பளம் முறையாக வரவில்லை, அது கிடைக்க வழி செய்திட வேண்டும். பல்வேறு வகையான கடன்களுக்கு மூன்று மாத காலம் அவகாசம் உண்டு என்று மத்திய அரசு அறிவித்ததும், பல வங்கிகள் இம்மாதத் தவணையை வாடிக்கையாளர்களைக் கேட்காமலேயே எடுத்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். வங்கிக்கு வந்து எழுதித்தர வேண்டும் என்று சொல்கிறார்களாம். இதை ஏன் பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை போன்ற பல கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களின் சொந்தச் செலவில் கிருமி நாசினி, முகக்கவசம், பிளீச்சிங் பவுடர் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். துயரமான நேரத்திலும் இப்படி அரசியல் செய்ய வேண்டாம். இந்த நோயின் தீவிரத்தைச் சொல்லி எச்சரிக்கை செய்திருக்க வேண்டிய தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறார்கள், இந்த மெத்தனப் போக்கைத் தவிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

இயற்கைக்கும் நோய்க்கும் சாதி, மதம், மொழி, இனம், நாடு, எல்லை இப்படி எந்தப் பாகுபாடும் இல்லை. அதனால் இந்தத் துயரமான நேரத்தில் மக்களின் உயிரைப் பணயம் வைத்து மலிவான அரசியல் செய்கிறவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். சாதி,மத அடிப்படையில நம்மைப் பிளவுபடுத்த யாரையுமே அனுமதிக்காதீர்கள். கொரோனா நோய்தான் நம்முடைய எதிரியே தவிர, நோயாளிகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒற்றுமையால்தான் எதையும் வெல்ல முடியும். பிரிவினையால் எதையும் வெல்ல முடியாது. வீட்டில் இருக்கச் சொல்வது உங்களது நன்மைக்காக, நாட்டுக்காக. உழைப்பது மட்டுமல்ல. வீட்டில் இருப்பதும் ஒருவிதமான போராட்டம்தான். கொரோனாவை எதிர்க்கும் போராட்டம். அதை வீட்டிற்குள் இருந்து நடத்துவோம் என மக்களுக்கு கூறியுள்ளார். படியுங்கள். எழுதுங்கள். பிள்ளைகளுடன் பேசுங்கள். பெற்றோர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உற்சாகமாகக் கழியுங்கள். திரும்பத் திரும்ப உங்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்- வீட்டிற்குள்ளேயே இருங்கள். வீட்டிற்குள்ளேயும் தனித்தனியாக இருங்கள். அதைக் கடைப்பிடித்தாலே கொரோனாவை வென்றுவிடலாம்.

இந்தியா இரண்டு மாபெரும் நோய்களை வென்றுவிட்டது. ஒன்று, பெரிய அம்மை மற்றும் போலியோ அதேபோல கொரோனாவையும் இந்தியா நிச்சயம் வெல்லும் என உலக சுகாதாரத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி சொல்லி இருப்பதை கூறிய ஸ்டாலின், தன்னம்பிக்கைதான் இப்போது நமக்குத் தேவை. தனித்திருப்போம். விழித்திருப்போம். கரோனாவை வெல்வோம்.
வணக்கம் என கூறி காணொலியில் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =