144ஐ மீறிய 100 பேர் கைது, 900 பேர் மீது வழக்கு: முழு விவரம்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தமிழகத்தில் 144தடை உத்தரவு அறிவித்தது. இருந்தும் சிலர் மதிக்காமல் டீ கடைகளில் கூடுவது, மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்குவது, ஊரடங்கு எப்படி இருக்கிறது என்று சுற்றிப் பார்ப்பது மற்றும் கூல் டிரிங்ஸ் வாங்க செல்வது, நண்பர்களை, உறவினர்களை பார்க்க செல்வது என்று கொரோனா பற்றிய எந்த பயமும் இல்லாமல் தாராளமாக நேற்று காலை வரை சுற்றி திரிந்தனர். இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதையடுத்து அரசு உத்தரவின்படி, அனைத்து டீ கடைகளும் உடனடியாக மூடப்பட்டது. இது அதிகளவில் நடந்து வருகிறது என்ற தகவலும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிரடியாக களத்தில் இறங்கிய தமிழக அரசு, 144 தடை உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்ய மாநகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்துறையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பறக்கும் படைகளை ஏற்படுத்தியது. தங்கள் போலீஸ் எல்லையில் அத்தியாவசியமில்லாமல் சுற்றி வரும் நபர்களை பிடித்து திருப்பி அனுப்பினர். பலரது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை, சூளைமேட்டில் உள்ள ஜி.ஹெச் ரோட்டில் வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று, விளையாடிக்கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்கள் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையில் 88 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் சாலையில் சுற்றித்திரிந்த 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சங்கரன்கோவில் பகுதியில் கொரோனா பற்றி வதந்தி பரப்பியதாக ஒருவரும், சேர்ந்தமரத்தில் ஒருவருக்கும் கொரோனா உள்ளதாக வதந்தி பரப்பிய ஒருவரும் கைது செய்யப்பட்டனர். கடையநல்லூரில் விதிகளை மீறி சாலையில் பைக்கில் சுற்றித் திரிந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் பைக்குகளில் சுற்றித்திரிந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காதர்பேட்டை, இக்பால் சாலை, ஷாகிராபாத், புதூர், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பைக்கில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் மற்றும் கடைகள் முன் அமர்ந்து உள்ளவர்கள் அனைவரையும் பலமுறை எச்சரித்தும் கலைந்து செல்லாததால், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் அருகே வாலிபர்கள் பைக்கில் டிக்டாக் வீடியோவை பதிவு செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மீறியதாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவர் மீதும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறலில் ஈடுபட்டதாக 80 பேர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் 14 பேர் மீதும், திருப்பூர் மாவட்டத்தில் 21 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 143 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மதுரையில் 144 தடை உத்தரவையும் மீறி, மதுரை நகர், புறநகரில் சுற்றித்திரிந்த 130 பேரை பிடித்து நேற்று ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விதிமீறல்களின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலத்தில் தடையை மீறியதாக 13 பேர் மீதும், நாமக்கல் மாவட்டத்தில் 13 பேர் மீதும், தர்மபுரி மாவட்டத்தில் 12 பேர் மீதும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டில் 5பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் 7 வழக்குகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 60, கரூரில் 10, பெரம்பலூரில் 15, அரியலூரில் 100, தஞ்சாவூரில் 75, திருவாரூரில் 22, நாகையில் 11 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் சுமார் 100 பேர் கைதாகி உள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் மீது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தடையாணை 144 ஐ மீறி சட்டத்திற்கு புறம்பாக வெளியில் வரும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது பேரழிவு மேலாண்மை சட்டப்படி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் வழக்கு அல்லது 144 தடை உத்தரவுப்படி 188 பிரிவின் கீழ் அவர்கள் மீது 6 மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 1