சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் கிடையாது : கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன் தகவல்

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் கிடையாது என்று  மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்தார்.

  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதிபுதூரில் உள்ள 4-வது இராணுவப் படைத்தள வளாகத்தில் கொரானா வைரஸ் தடுப்பு குறித்து சிகிச்சை வழங்குவதற்கான புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-      

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் கிடையாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 1-க்கு பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த 2000 பேர் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்கள். மேலும், 11 பேர் அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவின் ஆய்வில் இருந்து வருகிறார்கள். அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் 28 நாட்கள் கண்காணிக்கும் வகையில் மருத்துவக் குழு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் ஏதேனும் வைரஸ் காய்ச்சல் வந்தால் உரியசிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளும் வகையில் காரைக்குடி அமராவதிபுதூர் 4-வது இராணுவ படைத்தள வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட 212 அடுக்கு மாடிவீடுகள் தயார்நிலையில் உள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்து மருத்துவப் பரிசோதனை நடத்துபவர்களுக்கு இங்குள்ள கட்டடத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயார்நிலையில் உள்ளது. இதேபோல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் 100 நபர்கள் சிகிச்சை பெறுவதற்கு ஏற்ப தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

        எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அரசு உத்தரவிற்கிணங்க, தற்பொழுது நடைமுறையிலுள்ள 144 தடை உத்தரவை கையாண்டு கூடுமானவரையில் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்திட வேண்டும். மேலும், 5-க்கு மேற்பட்ட நபர்கள் கூடாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அக்கம்பக்கங்களில் இருப்பதாக அறியவந்தால் உடனடியாக சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.

அதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பொது நலன் கருதி தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருந்திட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன் கூறினார்.

      பின்னர், கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்கான அமராவதிபுதூர் தொழுநோய் மருத்துவப்பிரிவு வளாகத்தில் கூடுதலாக 55 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை பிரிவு மையங்கள் மற்றும் காரைக்குடி தலைமை மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை பிரிவு மையங்களை   அவர்  பார்வையிட்டார்.

      இந்த ஆய்வின்போது, அமராவதிபுதூர் 4-வது இராணுவ படைத்தள காவல் கண்காணிப்பாளர் கிளாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .பிரின்ஸ், இணை இயக்குநர் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) யசோதாமணி, காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி, சாக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்  திருப்பதிராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உட்பட கலந்து கொண்டனர்.

.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 13 = 18