கொரோனாவை நாம் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்? : டாக்டர் மா.ராதா தரும் டிப்ஸ்

கொரோனா வைரஸ் நோய் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சென்னை குடலியல் நிபுணர் மருத்துவர் மா.ராதா தொடர்ந்து தொலைக் காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். அவர் தந்துள்ள டிப்ஸ்கள் கீழே:

கொரோனை வைரஸை தடுப்பதற்கு இதுவரை, கை கழுவு, மாஸ்க் போடு, தனியாக இருக்கவும் என்ற தடுப்பு நடவடிக்கைகள் மட்டும் தான் பேசி இருக்கிறோம். இப்போது வீட்டில் எல்லாரும் அடைந்தாகி விட்டது. இனிமேல் என்ன செய்ய வேண்டும்?முதலில் ஆளுக்கொரு இடம் தனித் தனியாக தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு என்று ஒரு அறை, பாத்ரூம் தனியாக கொடுத்து விடலாம். இல்லாத பட்சத்தில் ஒவ்வொரு முறையும் கழிப்பறை பயன்படுத்திய பிறகு வெளியே வரும் முன்பு டெட்டால் அல்லது லைசால் கலந்து சுத்தம் செய்ய வேண்டும்.

ஒரு ஆளுக்கு,இரண்டு செட் காட்டன் உடைகள், ஒரு துண்டு,ஒரு டம்ளர் ஒரு தட்டு சோப் பேஸ்ட், பிரஷ், இரண்டு போர்வைகள், ஒரு தலையணை என்று தனித்தனியே பிரித்து அவரவர் இடங்களில் வைத்து விட வேண்டும்.

இதைப் பயன்படுத்தி குளித்து விட்டு வரும் போது அவர்களே உடைகளை துவைத்து டெட்டால் கலந்த தண்ணீரில் முக்கி வெயிலில் காய வைக்க வேண்டும். இப்படி காய வைத்த உடை மட்டுமே அணிய வேண்டும். கிட்டத்தட்ட சபரிமலை விரதம் இருக்கும் போது என்ன கடைப்பிடிப்போமோ அது தான். வீட்டில் அத்தனை பேரும் மாலை போட்டு இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளவும்.

இதைத் தவிர பீரோவில் உள்ள வேறு துணிகளை தொட வேண்டாம். ஏனெனில் எல்லாம் சுத்தம் செய்ய இயலாது தண்ணீர் மற்றும் மற்ற பொருட்களை சேர்த்து வைக்க வேண்டும். முதலி்ல் இவற்றை வீணடித்து விட்டால் அப்புறம் தேவையான சமயத்தில் கிடைக்காது என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளவும்

பெண்கள் காதில் கையில் கழுத்தில் அணிந்து இருக்கும் அனைத்து ஆபரணங்களும் கழட்ட வேண்டும். தாலி செயினை முக்கியமாக கழட்டி வைத்து விடலாம். வைக்கப்பிரி, முறுக்கு செயின் போன்றவை யை ஒழுங்காக நாம் சுத்தம் செய்ய இயலாது வைரஸ் கிருமிகள் உலோகத்தில் ஆறு மணி நேரம் இருக்கக் கூடியது. அந்த மகமாயியை வேண்டிக் கொண்டு தாலி செயினை கழற்றி வைத்துவிட்டு மஞ்சள் கயிறு மட்டும் அணிந்து கொள்ளலாம். கயிறு அணிந்தால் தினமும் அதில் மஞ்சள் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

இது தேவையா என்பவர்கள் எதுவுமே அணியத் தேவை இல்லை. கோயில்கள் எல்லாம் திறந்த பிறகு சாமி கும்பிட்ட பிறகு வேண்டுமானால் அணிந்து கொள்ளலாம். வட இந்திய பெண்கள் மாதிரி வெளியே செல்லும் போது அணிந்து விட்டு வந்து கழற்றி வைத்துக் கொள்ளலாம். அது தனிப்பட்டவரின் விருப்பங்கள்.

காய்ச்சல் கண்டிப்பாக வீட்டில் யாராவது ஒருவருக்கு முதலில் வரும். அப்படி காய்ச்சல் வந்த உடனே அரசாங்கத்திற்கு போன் செய்து சொல்லி விட்டு வீட்டில் ரெஸ்ட் எடுக்கவும். காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபரை அம்மை நோயாளிகள் கவனிப்பது போன்று யாரும் அருகில் செல்லாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில் உள்ள வீட்டு வேலைகளை மீதி அனைவரும் பங்கு போட்டுச் செய்யுங்கள். முதல் இரண்டு நாட்களுக்கு தலைவலி உடம்பு வலி இருக்கும். வெறும் பாரசிட்டமோல் மாத்திரை போட்டு ரெஸ்ட் எடுத்தால் மட்டும் போதுமானது.

மூன்றாவது, நாலாம் நாட்களில் இருமல் சளி தும்மல் வரக்கூடும். கையில் ஒரு சுத்தமான துணியை அல்லது துண்டை வைத்துக் கொள்ளவும். இருமும் போதும் தும்மும் போதும் வாயை அதனால் மூடிக் கொள்ளலாம். கைகளை சோப்புத் தண்ணீரில் கழுவ வேண்டும்.

ஐந்தாவது, ஆறாவது நாட்களில் வயிறு வலி மற்றும் வயிற்றுப் போக்கு ஆரம்பம் ஆகும். எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உண்டு விட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான்.

ஏழாவது நாள் உடம்பு புத்துணர்ச்சி பெறும். மற்றவை எல்லாம் இறங்கத் தொடங்கி விடும். நீங்கள் நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்து விடுவீர்கள்.

எப்படியும் வீட்டில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்களுக்கு வந்து தான் சரி ஆகும். இதற்கு பயப்பட வேண்டாம்.

1)ஏழு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தாலோ

2)மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தாலோ

3) மூச்சு விட முடியாமல் உதடுகள் எல்லாம் நீலம் பாரித்து இருந்தாலோ

4)நீண்ட நேரம் உறங்கிக் கொண்டு கேட்ட கேள்விக்கு மாறி மாறி பதில் அளித்தாலோ

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஊசிகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவை கொடுப்பார்கள்.அதில் சரியாகி விட்டால் வீட்டுக்கு வந்து விடலாம்.அதிலும் கேட்காதவர்களுக்கு அருகே உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை செய்யப் படும். நூறில் பத்து பேருக்கு மட்டுமே இந்த மாதிரி மருத்துவ மனை வர நேரிடும்.மற்றவர்கள் எல்லாம் மேற் சொன்ன முறையில் குணமாகும் வரை ரெஸ்ட் எடுத்தால் போதுமானது.

ஒரு முறை வந்து குணமானவர்களுக்கு திரும்ப வர வாய்ப்பு இல்லை. எனவே அவர்கள் தைரியமாக மற்றவர்கள் அருகில் சென்று உதவலாம். எனவே இந்த மாதிரி காய்ச்சல் வரும் நேரத்தில் என்ன செய்வது என்பதை இப்போது வீட்டில் இருக்கும் போது குடும்பத்தினர் கூட பேசி தைரியத்துடன் இருப்போம்,தப்பிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 − = 29