இந்தியாவின் பொருளாதாரம் மீள ப.சிதம்பரத்தின் 10 ஆலோசனைகள்

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிப்பிற்கு உத்தரவிட்டுள்ள பிரதமர் மோடிக்கு புகாழாரம் சூட்டி உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இக்கட்டான சூழலில் நம் பொருளாதாரம் மேம்பாடு அடைய 10 வகை திட்டங்களை அரசுக்கு ஆலோசனையாக முன்வைத்துள்ளார்.

 இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

”கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தது வரலாற்றுத் திருப்புமுனையான முடிவு. இந்த நேரத்தில் நாம் இதற்கு முன் செய்த விவாதங்களை, விமர்சனங்களைப் பின்னுக்குத் தள்ளிவைக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் நாமெல்லாம் படை வீரர்களாக இருப்போம். மோடி படைத் தலைவராகச் செயல்படுவார்.

பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமையாகும்.

கரோனா வைரஸின் தாக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தைச் சிக்கலில் இருந்து மீட்க 10 வகையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். இதை அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் ஏழை மக்கள் கையில் உடனடியாகப் பணத்தை வழங்க வேண்டியது அவசியமாகும்.

  1. முதலாவதாக இப்போதுள்ள வேலை வாய்ப்பையும், ஊதியத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஏழை மக்கள், விளிம்பு நிலை சமூகத்து மக்களின் கைகளில் பணம் புழங்க வேண்டும்.
  2. பிரதமர் விவசாயிகள் (கிசான்திட்டம்) திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதை இரு மடங்காக்கி ரூ.12 ஆயிரத்தை விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
  3. கிசான் திட்டத்தில் இல்லாத விவசாயிகளை், அதாவது குத்தகை நிலத்தில் உழும் விவசாயிகளையும் இதில் இணைக்கக் கோரி மாநில அரசுகளிடம் கூற வேண்டும். அவர்களுக்கும் இரு தவணைகளாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.
  4. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைத்து பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கில் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும்.
  5. நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். அதோடு ரூ.10 கிலோ அரிசி அல்லது கோதுமையை அடுத்த 21 நாட்களுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கும் வழங்கிட வேண்டும்.
  6. பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களையும், அவர்களின் ஊதியத்தையும் குறைக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  7. ஒவ்வொரு வார்டு வாரியாக, மண்டல் வாரியாக பதிவேட்டை உருவாக்கி வங்கிக் கணக்கில் பணம் பெறாதவர்களை அழைத்து அவர்களுக்குப் பணம் வழங்கிட வேண்டும். இந்தத் திட்டத்தில் வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்களுக்கும் பணம் வழங்கிட வேண்டும்.
  8. குறைந்தபட்ச விசாரணையுடன், ஆவணங்களுடன் அனைவருக்கும் வங்கிக் கணக்கு உருவாக்கி, அதில் ஆதார் அடிப்படையில், ஒவ்வொரு கணக்குதாரருக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும்.
  9. அனைத்து விதமான வரிகளையும் காலதாமதமாகச் செலுத்தலாம். ஜூன் 30-ம் தேதி வரை வரிகளைச் செலுத்த அவகாசம் வழங்கலாம்.
  10. பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகியவற்றுக்கு அவர்கள் பெறும் வரி வருவாய் அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்கலாம். வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ள கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கலாம்.

இந்தத் திட்டங்கள், ஆலோசனைகள் அனைத்தும் தற்போதுள்ள சூழலுக்காகனவை. மக்கள் கைகளில், குறிப்பாக ஏழை மக்கள் கைகளில் அதிகமான பணம் புழங்கும்போது பொருளாதாரம் மேல் எழும்பும். வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கம் மக்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதுதான் உடனடி சவால். அடுத்தடுத்த நாட்களில் அடுத்துவரும் சவால்களை அடையாளம் காண்போம்.மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே இருங்கள். ஸ்டே ஹோம் இந்தியா என்ற வாசகம் மிகப்பெரிய பேரணியாகும்”.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 − = 62