நிர்பயா குற்றவாளிகளின் கதை முடிந்தது; நால்வருக்கும் தூக்கு

புதுடில்லி: ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள், 4 பேரும் திஹார் சிறையில், இன்று(மார்ச் 20) அதிகாலை 5.30 மணிக்கு, தூக்கிலிடப்பட்டனர்.

குற்றம் நடந்து 7 ஆண்டுகளுக்கு பின், ‘ஒரு வழியாக’ அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, ஆறு பேரும், குற்றவாளிகள் என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குற்றவாளிகளில் ஒருவர், ‘மைனராக’ இருந்ததால், அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில், மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மீதமுள்ள ஐந்து பேருக்கு, துாக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், ராம் சிங் என்ற குற்றவாளி, டில்லி திஹார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், மீதமுள்ள முகேஷ் குமார் சிங்(32), வினய் சர்மா(26), பவன் குப்தா(25), அக்ஷய் குமார் சிங்(31) ஆகிய நான்கு பேருக்கும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்று முறை, துாக்கு தண்டனைக்கான தேதி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், திஹார் சிறையின், 3ம் எண் சிறையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது. 30 நிமிடங்கள் அவர்கள் 4 பேரும் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருந்தனர். 4 குற்றவாளிகளின் உடல்களை பரிசோதித்து, அவர்கள் இறந்ததை டாக்டர் பதிவு செய்தார். மக்கள் கூடியதையடுத்து திஹார் சிறை வாசலில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில், “ஒட்டு மொத்த தேசத்துக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது. எனது மகளுக்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கும் நீதி கிடைத்து விட்டது. கொடிய செயல்களில் ஈடுபடுவோருக்கு இது பாடமாக அமையட்டும்” என்றார்.

திஹார் சிறை முன்பு, தூக்கு தண்டனைக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ‘மார்ச் 20’ நிர்பயா தினம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தூக்கு நிறைவேறியதும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் சிறைக்கு முன்பு தேசிய கொடி அசைத்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உயிரிழந்த நிர்பயா குற்றவாளிகளின் உடல்கள், இன்று காலை 8.30 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 5 டாக்டர்கள் கொண்ட குழு, பிரேத பரிசோதனை செய்யும் எனவும், நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும், மீரட் நகரை சேர்ந்த பவன் ஜல்லாட் என்பவர் தூக்கு தண்டனையை நிறைவேற்றினார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திஹார் சிறைக்கு நேற்று அழைத்து வரப்பட்ட அவர், தூக்கு ஒத்திகையிலும் ஈடுபட்டார். தூக்கை நிறைவேற்ற பவனுக்கு 8 மணிலா கயிறுகள் வழங்கப்பட்டன. அதில் 4 கயிறுகளை அவர் தேர்வு செய்தார். இதனையடுத்து சிறையில் தனி அறையில் தங்கிய பவன், அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து, குற்றவாளிகளை தூக்கு போட தயாரானார். ஒருவருக்கு தலா ரூ.20 ஆயிரம் என 4 குற்றவாளிளை தூக்கிலிட, பவனுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. அவருக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

முன்னதாக, நிர்பயா குற்றவாளிகளின் வக்கீல், நேற்று நள்ளிரவில் தாக்கல் செய்த மனுவை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் குற்றவாளிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட, அது அவசர வழக்காக அதிகாலை 2.30 மணிக்கு விசாரிக்கப்பட்டது. அம்மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய, நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை உறுதியானது.

விசாரணையில், குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சிங், ‘அவர்கள் தூக்கிலிடப்படுவது உறுதி. ஆனால் அதை 2 அல்லது 3 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்’ என வாதாடினார். நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் அவர்களை 5 -10 நிமிடங்கள் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் சிறை நடைமுறையில் அதற்கு அனுமதி இல்லை என நீதிபதி நிராகரித்தார்.

மகிழ்ச்சியில் நிர்பயா தாயார் பேட்டியளித்த போது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 3 =