“கொரோனா அறிகுறி தெரிவதால் லீவு வேணும்”-கடிதம் எழுதிய மாணவன்; ஆசிரியர் கொடுத்த அட்வைஸ்..!

கொரோனா அறிகுறி இருப்பதால் தனக்கு நீண்ட விடுப்பு தரும்படி ஆசிரியருக்கு விளையாட்டாக கடிதம் எழுதிய மாணவனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த தலைமை ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை முகலிவாக்கத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். அதில் “ நான் தங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. ஆகவே மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுத்து கொள்கிறேன்.

மேலும் சளி, காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அரசாங்கமும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகையால் நான் மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாள்களை வருகை நாளாகப் பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியிருந்தான்.

மேலும் இந்தக் கடிதத்தை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளான். இதனையடுத்து இந்தக் கடிதம் வைரலானது. இந்த செய்தியை கேள்விப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவனின் பெற்றோரை அழைத்து பேசியது. அப்போது அந்த மாணவன் கடிதத்தை விளையாட்டாக எழுதியது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆசிரியர் கூறும்போது “அவனுடன் படிக்கும் மாணவர்கள் அவனிடம் கொரோனா வைரஸை குறிப்பிட்டு விடுப்புக் கடிதம் எழுதச் சொல்லியுள்ளனர். அதனை கேட்ட மாணவன் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளான். இதற்காக அவனது பெற்றோர்கள் எங்களிடம் மன்னிப்புக் கேட்டு கொண்டனர்” என்றார். மாணவன் விளையாட்டாக கடிதம் எழுதியிருந்தபோதும், தலைமை ஆசிரியர் மாணவனின் பெற்றோர்களிடம் மாணவனுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான சான்றுகளை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =