டெல்லி கலவரம் : பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான டெல்லி போராட்டத்தில் வெடித்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வருகின்றன. டெல்லியில் நேற்றுமுன்தினம், தொடர்ந்து இரண்டாவது நாளாக குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. வடகிழக்கு டெல்லி கலவர பூமியானது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ், பஜன்புரா பகுதிகள் போர்க்களங்கள் போல காணப்பட்டன.

ஒருவரை ஒருவர் கற்களையும், செங்கற்களையும் வீசி தாக்கினர். டயர்களை கொளுத்திப் போட்டனர். கடைகள், வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 48 போலீசாரும், பொது மக்களில் 98 பேரும் படுகாயம் அடைந்தனர். ரத்தன்லால் என்ற போலீஸ் ஏட்டு உள்பட 5 பேர் பலியானார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டெல்லி வந்த நிலையில், தலைநகரில் வன்முறை தலைவிரித்தாடியதால் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன்கீழ் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 24-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவுக்கு பணியாமல் நேற்றும் கிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் நேற்று மட்டும் 6 பேர் இறந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது.  இந்த நிலையில்,  மேலும் 4 பேர் உயிரிழந்தாக குருதேக் பகாதூர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + = 15