கொரோனா பல்வேறு நாடுகளை சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு

உலகம் முழுவதும், 37 நாடுகளில், 80 ஆயிரம் பேர் ‘கொரோனா’ தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பலி எண்ணிக்கை, 2,715 ஆக அதிகரித்துள்ளது.
‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதல், சீனாவை மட்டுமல்ல, உலகையே அச்சுறுத்தி வருகிறது. நோயின் கோரத் தாக்குதலால், உலக அளவில் சீனா தனிமைப்பட்டுள்ள நிலையில், தற்போது 35க்கும் மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவியுள்ளது. சீனாவின் எல்லைகளை தாண்டி, தென்கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளிலும், உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை, 2,715 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. எனினும், உயிரிழப்பு, பல ஆயிரங்களை தாண்ட வாய்ப்புள்ளதாகவும், அச்சம் நிலவுகிறது.
அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில், மிகவும் ரகசியம் காக்கும் சீனாவில், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும், அதிகபட்ச ரகசியம் காக்கப்படலாம் என உலக நாடுகள் கருதுகின்றன.எனினும், சீனாவில் மட்டும் தற்போது, 78 ஆயிரத்து 064 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


கடந்த இரு நாட்களில் மட்டும், சீனாவில் புதிதாக 500 பேருக்கு நோய் தாக்கியுள்ளது; 70 பேர் இறந்துள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட, 27 ஆயிரத்து 323 பேர் குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெருமளவில் கட்டுப்படுத்த முடியாமல் பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலை, ‘பாண்டமிக்’ என,மருத்துவத்துறையினர் குறிப் பிடுகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை, ‘பாண்டமிக்’ என அறிவிக்கவும் உலக சுகாதார நிறுவனம் தயாராகி வருகிறது.
ஈரான் அமைச்சருக்கு ‘கொரோனா’
ஈரான் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 12 பேர் இறந்துள்ளனர். அந்நாட்டு சுகாதாரத் துறை இணை அமைச்சர் இராஜ் ஹரிர்ச்சியும் நோய் பாதிப்புக்கு ஆளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் இவர், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இருமியபடியே இருந்தார். வியர்வையில் நனைந்தபடி இருந்த அவரை, மருத்துவக்குழுவினர் பரிசோதித்தபோது, நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அரசு செய்தி தொடர்பாளர் அலி ரபீ கூறுகையில், ”ஈரானில், 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தீவிரமாக சுகாதார திட்டங்களை மேற்கொண்டு வந்த அமைச்சர் இராஜ் ஹரிர்ச்சியும், நோயின் பிடியில் சிக்கியது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்றார்.
‘ஆன்லைன் ஷாப்பிங்’ அதிகரிப்பு
நோயின் மையப்புள்ளியாக இருக்கும், சீனாவின் ஹுபே மாகாணத்தில், நோய் பீதி காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக, ஆறு கோடி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், அடைந்து கிடக்கின்றனர். இதேபோல், சீனாவின் பல மாகாணங்களிலும் மக்கள், வீட்டுக்கு வெளியே வர அஞ்சுகின்றனர். இதனால், வணிக வளாகங்கள் உட்பட பொது இடங்கள், ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியுள்ளன. மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு ஆன்லைன், ‘ஷாப்பிங்’கை மட்டுமே நம்பியுள்ளனர். புத்தகங்கள், யோகா தரைவிரிப்புகள், காண்டம், மருந்து விற்பனை அதிகரித்துள்ளதாக, ஆன்லைன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − = 11