இந்தியா – அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிஏஏ இடம்பெறவில்லை என தகவல்

இந்தியா – அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பேச்சு இடம்பெறவில்லை என வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்து உள்ளார்.

ஐதராபாத் மாளிகையின் முன் உள்ள புல்வெளியில் பிரதமர் மோடியும்- அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மனநலம் மற்றும் மருத்துவ தயாரிப்புகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். ஐ.ஓ.சி மற்றும் எக்ஸான்மொபில் இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் அவர்கள் கையெழுத்திட்டனர்.

டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிந்ததும் பிரதமர் மோடியும்- டொனால்டு டிரம்பும் கூட்டாக பேட்டி அளித்தனர்.

இந்தியா – அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியதாவது:- இந்தியாவும் அமெரிக்காவும் ஐந்து முக்கிய பிரிவுகளில் பேச்சுவார்த்தை நடத்தியது . பாதுகாப்பு, ராணுவம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொடர்பு கொள்ளுதல் ஆகியவை ஆகும்.

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கு பரிசீலிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். பாதுகாப்புத் துறையில் கொள்முதல், தொழில்நுட்பம் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக இந்தியாவுக்கு மிக உயர்ந்த பரிசீலிப்பை வழங்குவதாக ஜனாதிபதி டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பது மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பை மீண்டும் புதுப்பிப்பது குறித்து செயற்குழுக்களை அமைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பிரச்சனை இடம்பெறவில்லை. பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது மற்றும் இந்தியாவின் கவலைகள் முன் வைக்கப்பட்டன.

ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியவற்றில் சாதகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். சமீபத்தில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் உட்பட இரண்டு தூதர்கள் வருகை தந்தனர் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 12 =