11 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு விண்ணப்பம் : முடிவு எடுக்காமல் மேலும் 9 கல்லூரிகள் – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் 11 என்ஜினீயரிங் கல்லூரிகள் வரும் கல்வியாண்டு முதல் மூட முடிவு செய்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இருக்கிறது.

என்ஜினீயரிங் படிப்புக்கு மவுசு இருந்த காலம் போய், கடந்த சில ஆண்டுகளாக அதற்கான வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. அதற்கேற்றாற்போல், ஒவ்வொரு ஆண்டும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது. இதனால் என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் நீட்டிப்பு, இணைப்பு அந்தஸ்து, மாணவர் சேர்க்கைக்கு அவை சார்ந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தெரிவித்து இருந்தது.அந்த வகையில், தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் 2020-21-ம் கல்வியாண்டுக்கான அங்கீகாரம், இணைப்பு அந்தஸ்து, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி இருந்தது.

இதற்கான கால அவகாசமும் இடையில் நீட்டிக்கப்பட்டு, கடந்த 21-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. கால அவகாசம் முடிந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 557 என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் 537 கல்லூரிகள் மட்டுமே முழுவதுமாக விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.விண்ணப்பிக்காத 20 கல்லூரிகளில், 11 என்ஜினீயரிங் கல்லூரிகள் அங்கீகார நீட்டிப்பு, இணைப்பு அந்தஸ்து, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்காததும், வரும் கல்வியாண்டு முதல் கல்லூரியை மூடுவதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 7 கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்காததும், 2 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தொடருவது பற்றி எந்த முடிவை தெரிவிக்காததும் தெரிய வந்துள்ளது.இதுதவிர, 2020-21-ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைப்பதற்கும் சில கல்லூரிகள் விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேற்சொன்ன என்ஜினீயரிங் கல்லூரிகள் விண்ணப்பம் எதையும் சமர்ப்பிக்காததாலும், மாணவர் சேர்க்கையை நிறுத்தும் முடிவை அந்த கல்லூரிகள் எடுத்ததாலும் அவற்றில் வரும் கல்வியாண்டு (2020-21) முதல் மாணவர் சேர்க்கையை நிறுத்தவும் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாக பேசப்படுகிறது.

அந்த கல்லூரிகள் எவை? என்பது குறித்தும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் புதிதாக என்ஜினீயரிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) ஏற்கனவே தடைவிதித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 + = 57