புதுகையில் புதுமையை உண்டாக்கிய புத்தகத் திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 4வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பிப்.14ம் தேதி தொடங்கி இன்றுடன்(பிப்.23) நிறைவு பெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் பல வித்தியாசமான நிகழ்வுகளை காட்சிப்படுத்தியுள்ளனர். அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள், தன்னார்வ தொண்டர்கள், புதுக்கோட்டையின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள், புத்தக ஆர்வலர்கள், படைப்பாளிகள் ஆகியோர் இதை வெற்றிகரமான திருவிழாவாக நிகழ்த்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளனர்.

50அரங்குகள், பல்லாயிரக்கணக்கான தலைப்புகளில் பல லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்று இருந்தன. 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இதேப்போல பொதுமக்கள், புத்தக ஆர்வலர்கள் என கடந்த 9நாட்களில் 1லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தக திருவிழாவை நோக்கி படையெடுத்தனர்.

மாணவர்களுக்காக அறிவியல் விழிப்புணர்வு, விஞ்ஞானிகளுடன் உரையாடல், மாலையில் அரசுப்பள்ளி மாணவர்களின் பாரம்பரிய கலாச்சார நடனங்கள், யோகா போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அதைப்போன்று சிறந்த கவிதை, சிறுகதை, கட்டுரை நாவல்களுக்கான விருதுகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா, இரவு 7மணிக்கு மேல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் இனிமையான பேச்சு இப்படி பல பட்டியல்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் நிறைந்திருந்தது.

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் வெளியிட்ட “கீழடி வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்” என்ற புத்தகம் 739 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அரங்கில் “கரையான்கள் அரிக்கும் புத்தகம்” என்ற தலைப்பில் அண்மையில் வெளிவந்த புத்தகம் விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே விற்று தீர்ந்து முடிந்துவிட்டது. இதேபோல் கீழடி அரங்கில் “லெனின் அரசும் புரட்சியும்” என்ற புத்தகம் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. மற்ற அரங்குகளிலும் பல வித்தியாசமான புத்தகங்கள் வாசகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று எல்.ஐ.சியின் அரங்கும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புத்தகக் திருவிழாவை பற்றி புத்தக ஆர்வலர்களின் கருத்துகள்….

கே.கோவிந்தசாமி, இயன்முறை மருத்துவர், ஆலங்குடி:- புதுக்கோட்டையை புகழ்கோட்டையாக மாற்றிக்கொண்டிருக்கிறது இந்த புத்தகத்திருவிழா. அநேக புத்தகங்களுக்கிடையே கடந்து செல்லும் இங்கு வரும் மக்கள் படிக்க வேண்டும் என்ற புத்தாக்கம் பெறுகிறார்கள்.

தன்னை புரட்டிப் பார்ப்பவர்களின் வாழ்வையை புரட்டிப்போடும் அமைதி ஆயுதம்தான் புத்தகம். இந்த புதுகை புத்தகத் திருவிழா மக்களுக்கு ஓர் அறிவுத்திருவிழா. பல்வேறு எழுத்தாளர்களின் புரட்சி எழுத்துகளை ஒரே இடத்தில் குவித்து வைத்து கொண்டாட செய்த உள்ளங்கள் என்றும் உள்ளப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டும்.

சா.விஸ்வநாதன், புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலர்:- புத்தக அரங்குகள் எளிதாகச் சென்று வருவது போன்று அமைக்கப்பட்டிருப்பது இந்த ஆண்டின் சிறப்பு அம்சம். “அப்துல்கலாம் எனது பயணம்” என்ற நூலில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்று மூன்று புத்தகங்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பார். அதில் முதல் புத்தகம் லில்லியன் ஈஷ்லர் வாட்சன் எழுதிய “லைட் ஃப்ரெம் மெனி லேம்ஸ்” இந்தப் புத்தகத்தை இங்கே பார்த்தவுடன் புதையல் கிடைத்தது போன்று இருந்தது. உடனே வாங்கிவிட்டேன்.

சாகித்ய அகாதமி நூல் அரங்கில் நிறைய புத்தகங்கள் வாங்கினேன். “தமிழில் சுயசரிதங்கள்” என்ற சா.கந்தசாமியின் தொகுப்பு மற்றும் ஜெயகாந்தன் மற்றும் சிற்பி பாலசுப்பிரமணியன் தொகுத்த மகாகவி பாரதியார் கட்டுரைகள், இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் வந்துள்ள 50ரூபாய் நூல்கள் என்னைக் கவர்ந்தன. அரையப்பட்டி பள்ளி 60மாணவர்களுக்கு 60புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துள்ளேன். காவல்துறை அதிகாரி முனைவர் த.செந்தில்குமார் எழுதி விகடன் பிரசுரித்துள்ள “பெரிதினும் பெரிது கேள்” என்ற புத்தகம் வாங்கினேன். போட்டித் தேர்விற்கு தயாராகும் ஒவ்வொரு மாணவர்களும் வாசிக்க வேண்டிய நூல் அது. அதேபோன்று விகடனில் குன்றக்குடி ஆதீனம் எழுதிய “அன்பே தவம்” என்ற தலைப்பில் வெளிவந்த தொடர் தற்போது நூலாக விற்பனைக்கு வந்துள்ளது. எனக்கும் அன்பளிப்புக்குமாக மூன்று வாங்கினேன். பழ.அதியமான் எழுதிய “வைக்கம் போராட்டம்”, சாகித்ய அகாதமி விருது பெற்ற சோ.தர்மன் எழுதிய “சூல்” நாவலும் வாங்கினேன்.

சு.சுபாஷினி, மாணவி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, திருச்சி-: என்னைப் பொறுத்தவரைக்கும் கடந்த 4ஆண்டுகளாக தொடர்ந்து இந்த புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். பாடப்புத்தகங்கள் தராத அனுபவத்தை இலக்கிய புத்தகங்கள் எனக்கு தருகிறது. இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் என்னதான் இணையதளத்தில் அந்தப் புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படித்தாலும், நேரடியாக புத்தகத்தை வாசிக்கும் இனிமை இருக்காது.

அதைவிட என்னுடைய அறைக்குள் இருக்கும் புத்தகங்கள் என்னை எப்போதும் ஒரு சிறந்த அறிவாளியாக மாற்றுவதற்கு உதவும் புத்தங்களாக அவை இருக்கின்றன என்பது நூறு சதவீதம் உண்மையான விசயம். இந்தப் புத்தகத்தில் 2ஆயிரத்திற்கும் மேலாக புத்தகங்கள் வாங்கியுள்ளேன் அதில் குறிப்பிடும் படியாக இலக்கிய சொற்பொழிவாளர் சுகி.சிவம் எழுதிய “நீ… நான்… நிஜம்” இந்த புத்தகம் ஒரு பாரம்பரிய பத்திரிக்கையில் தொடராக வெளிவந்தது. அதனால் இந்த புத்தகத்தை வாங்கினேன்.

மு.கீதா, ஆசிரியர், புதுக்கோட்டை:- சுண்டல் மடித்து கொடுக்கும் காகிதங்களில் ஏதாவது செய்தி கிடைக்காதா? என்று தேடி தேடிப் படித்த ஆபிராம்லிங்கன் அமெரிக்க அதிபரானார். இன்று தன்னை தேடி வருபவர்களுக்கு அறிவை வாரி வழங்கும் புத்தகம் என்றும் நமக்கு புதுயுகம். யாருமே படிக்கவில்லை என்று நொந்து நூலகத்தில் ஒய்வெடுப்பதற்காக கவலையுறும் புத்தகங்கள், புத்தக திருவிழாக்களில் புத்துணர்வை பெற்று மானுடத்துக்கு அறிவை வழங்கி வருகிறது.

இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் அழகிய சிறுகதைகள், கவிதைகள் சிறுவர்களுக்கு திருவிழா மகிழ்வை தந்தது. வாசிப்பை சுவாசிக்க வேண்டும் என்று வருடா வருடம் உணர்த்தி புதுகை புத்தக திருவிழா பல கோட்டைகளை கொண்ட புதுக்கோட்டையை புத்தக கோட்டையாக மாற்றி அறிவுசார் இளைஞர்களை அகிலத்துக்கே அளிக்கப்போகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விலைமதிப்பற்றோராய் உயர விலையை பார்க்காமல் நல்ல புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும்.

பொ.ஜெயச்சந்திரன்,
திருவரங்குளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 62 = 70