அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை இந்தியா வருகை : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 2 நாட்கள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். பிரதமர் மோடியின் சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் எனத் தெரிகிறது.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வல்லபாய் கிரிக்கெட் மைதானம் வரை 22 கி.மீ. தூரத்துக்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக நாளை இந்தியா வருகிறார். குஜராத்தின் அகமதாபாத் நகர் விமான நிலையத்தில் வந்திறங்கும் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பார் என்று தெரிகிறது. அங்கிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ட்ரம்புக்கு அளிக்க உள்ளனர்.

வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் அதிபர் ட்ரம்ப், அங்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி அவரது பீஸ்ட் கார், மரைன் ஒன் ஹெலிகாப்டர் உள்ளிட்டவை அகமதாபாத்துக்கு வந்துள்ளன. அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் நகரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

அகமதாபாத் நகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் சக்திவாய்ந்த ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அதிபர் ட்ரம்ப் வருகையின்போது முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் அவரது மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜெராட் குஷ்னர் உள்ளிட்டோரும் வருகின்றனர். அகமதாபாத் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்கின்றனர். அன்றிரவு டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் ட்ரம்ப் தங்குகிறார்.

அடுத்த நாள், அதாவது 25-ம் தேதி காலை, அரசியல் ரீதியான நிகழ்ச்சிகள் தொடங்கும். அன்றைய தினம் காலையில், குடியரசுத்தலைவர் மாளிகையில், ட்ரம்ப் தம்பதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு, ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள். டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொடர்ந்து, டொனால்டு ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி மதிய விருந்தளிப்பார்.

பின்னர், இருவரும் கூட்டாகச் சேர்ந்து ஊடகங்களைச் சந்திக்கின்றனர். அப்போது, செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அனுமதியில்லை. மதியம் 3 மணியளவில் அமெரிக்கத் தூதரகம் செல்லும் டொனால்டு ட்ரம்ப், சில தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். தூதரக அதிகாரிகளுடனும் உரையாடுவார். இரவு 7.15 மணிக்கு, மீண்டும் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு ட்ரம்ப் தம்பதி வருவார்கள். குடியரசுத்தலைவர் மாளிகையில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்திய நாட்டு மக்கள் சார்பில், ட்ரம்ப் தம்பதிக்கு மிகப்பெரிய விருந்தளிக்கப்படும். இதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =