கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து – 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலங்களை மீட்டு கொடுத்த தமிழக அரசு

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயன பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக்க சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து 2017ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது.

காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன்வடிவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வட்டாரங்கள் மட்டுமே வேளாண் மண்டலம் என்ற வரையறையின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதும் இந்த சட்ட முன் வடிவில் இணைக்கப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், வேளாண்மை சாராத தொழில்கள், குறிப்பாக துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்காலை, அலுமினியம் உருக்காலை, எண்ணெய் மற்றும் நிலக்கரிப்படுகை, மீத்தேன் ஆலைகள், பாறைப் படிம எரிவாயு, ஹைட்ரோகார்பன் வாயு எடுத்தல், வாயுக்களின் ஆய்வுகள், துளைத்தெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயண ஆலை முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யாதது ஏன் என்று தமிழக அரசுக்கு வைகோ தொடர் கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன் வேளாண் மண்டல பட்டியலின் அனுமதி மறுக்கப்பட்ட தொழில்களில் பெட்ரோலிய தொழில் இல்லாமல் இருந்தது. பட்டியலில் பெட்ரோலிய தொழில்களை சேர்த்து தடை விதிக்க வைகோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயண ஆலை முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 6