மகளிர் டி20 உலகக்கோப்பை: 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதல்

மகளிருக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்குகி‌றது. முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 7-ஆவது மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள் A மற்றும் B என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேச அணிகளுடன் இந்திய அணி A பிரிவில் உள்ளது. இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் தாய்லாந்து ஆகிய அணிகள் B பிரிவில் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதையடுத்து பிப்ரவரி 24-ஆம் தேதி வங்கதேச அணியுடனும், 27-ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும், 29-ஆம் தேதி இலங்கை அணியுடனும் இந்தியா மோதவுள்ளது. தொடரின் இறுதிப்போட்டி மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி‌ புகழ்பெற்ற மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதுவரை 6 முறை நடந்துள்ள இத்தொடர்களில், ஆஸ்திரேலிய அணி நான்கு முறையும், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா ஒரு முறையும் சாம்பியனாக மகுடம் சூடியுள்ளன. மகளிர் T20 உலக்கோப்பை தொடர்களில் இந்திய அணி இதுவரை இறுதிப்போட்டி வரை முன்னேறியதில்லை. 2009, 2010 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் அரையிறுதி வரை சென்றதே இந்திய மகளிர் அணியின் அதிகப்பட்ச முன்னேற்றமாகும். ஹர்மன் ப்ரீத் தலைமையில் ஸ்மிரித்தி மந்தானா, பூனம் யாதவ் உள்ளிட்ட இளம் வீராங்கனைகளுடன் இந்திய அணி இம்முறை களமிறங்கவுள்ளது.

image

கிரிக்கெட் வல்லுநர்களால் நடப்பு தொடரில் மகுடம் சூட வாய்ப்புள்ள அணிகளாக கணிக்கப்பட்டுள்ள பட்டியலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடன் இந்திய அணியும் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 − 67 =