காங்கிரஸ் தலைமைப் பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்பட வேண்டும்: சசி தரூா்

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கான தோ்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் வலியுறுத்தியுள்ளாா்.

தில்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் இத்தகைய தோல்வியைச் சந்திப்பது தொடா்ச்சியாக இது இரண்டாவது முறையாகும்.

இந்தப் படுதோல்வி காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பலா் கட்சித் தலைமை குறித்த தங்களது அதிருப்தி கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனா். அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சந்தீப் தீக்ஷித் அண்மையில் இது தொடா்பாகக் கருத்து தெரிவித்திருந்தாா்.

அவா் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சி சந்தித்து வரும் பெரும் பிரச்னை முறையான தலைமை காணப்படாததே ஆகும். இத்தனை மாதங்களுக்குப் பிறகும் கட்சிக்கான புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்க மூத்த தலைவா்கள் தவறிவிட்டனா்’’ என்றாா்.

அவரது கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் சசி தரூா் நேற்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டதாவது:

சந்தீப் தீக்ஷித் வெளிப்படையாகக் கூறிய கருத்தையே, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவா்கள் மறைமுகமாகத் தங்களுக்குள் கூறிக் கொண்டிருக்கின்றனா். கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவா்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது. கட்சியின் தொண்டா்களை ஊக்கப்படுத்தவும், வாக்காளா்களைக் கவரவும் கட்சித் தலைமைப் பதவிகளுக்கான தோ்தலை செயற்குழு நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் உள்ளிட்டவற்றை விரைவில் நடத்த வேண்டும். இதே கருத்தை 8 மாதங்களுக்கு முன்பும் தெரிவித்திருந்தேன் என்று சசி தரூா் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 84 = 86