பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் : சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல்’ மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்ட மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக வைத்த  கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தேர்வுக் குழுவுக்கு அனுப்பாததைக் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்த நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட மசோதா, பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு, ஒருமனதாக நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், இன்னமும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பின்றி நிறைவேற்றப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வோளாண் மண்டல மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து பேசினார். ஒரு விவசாயியாக இதனை தாக்கல் செய்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த சட்ட முன்வடிவு மூலமாக, டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், மென்களிக்கல் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும், விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். 

மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இதன் கீழ் வருகிறது.

காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களுக்கும், அதேபோன்று அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்த தடை பொருந்தும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, இதற்காக தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் எனவும் இந்த அதிகார அமைப்பு முதலமைச்சர் தலைமையில் செயல்படும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 6 =