சிறந்த கைவினைஞர்கள், பட்டு விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான ‘வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது’களை 10 கைவினைஞர்களுக்கும், ‘பூம்புகார் மாநில விருது’களை 10 கைவினைஞர்களுக்கும், பட்டு வளர்ச்சித் துறை சார்பில் மாநில விருதுகளை 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்கும் இன்று (பிப்.20) தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (பிப்.20) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடனும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பூம்புகார் என்ற பெயரில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. கைவினைஞர்களைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கவுரவித்து வருகிறது.

தமிழ்நாட்டில் கைத்திறன் தொழிலில் பணிபுரிந்து அதற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கைவினைஞர்களுக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ என்ற உயரிய விருது வழங்கப்படும் என்று 8.5.2013 அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்ட திறன்மிகு கைவினைஞர்களுக்கு, ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ என்ற விருது 2013-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது, தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, 8 கிராம் தங்கப் பதக்கம், ஒரு தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் கொண்டதாகும்.

2019-2020 ஆம் ஆண்டுக்கான ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதுகள் ஜி.வித்தியா சங்கர் ஸ்தபதி, எம்.ராஜமாணிக்கம், கே.வெங்கடாசலம், டி.வெள்ளைக்கண்ணு, என்.ஜெகதீஸ்வரன், ஆர்.ராமலிங்கம், எம்.பொன்னுசாமி, எம்.துரைராஜ், எம்.கணேசன், வி.பலராமன் ஆகிய 10 விருதாளர்களுக்கு, முதல்வர் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, 8 கிராம் தங்கப் பதக்கம், ஒரு தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த 10 கைவினைஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘பூம்புகார் மாநில விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள், 50 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் ஆகியன உள்ளடக்கியதாகும். இவ்விருது பெறும் கைவினைஞர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவராக இருக்கும் பட்சத்தில் இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3,500 பெறத் தகுதி உடையவராகிறார்கள்.

‘பூம்புகார் மாநில விருது’களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

2019-2020 ஆம் ஆண்டு பூம்புகார் மாநில விருதுகளை எம்.முருகராஜ், வி.மோகன், ஆர்.பிரசன்ன வெங்கடேஷ், கே.பால்ராஜ், ஜி.சுந்தரம், எம்.சந்திரசேகரன், என்.கைருன்னிஸா, எம்.கண்மணி, ஆர்.குமரகுரு, எம்.டி.வனிதாஸ்ரீ ஆகிய 10 விருதாளர்களுக்கு முதல்வர் தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

சிறந்த பட்டு விவசாயிகளுக்கான விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்டு வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், மாநில அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முறையே 1 லட்சம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2019-2020 ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசுக்கான 1 லட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நா.அன்பழகனுக்கும், இரண்டாம் பரிசுக்கான 75 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ப.பிரபுவுக்கும், மூன்றாம் பரிசுக்கான 50 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த து.செந்திலுக்கும் முதல்வர் வழங்கி கவுரவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 56 = 65