‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி’ – கமல்ஹாசன் அறிவிப்பு

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் விழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் காயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் இங்கு லைகா நிறுவனம் சார்பிலோ, ராஜ் கமல் நிறுவனம் சார்பிலோ அல்லது வேறு எந்த நிறுவனம் சார்பிலோ வரவில்லை. நான் சிறுவயதில் இருந்தே சினிமாவில் வளர்ந்தேன். இது என் குடும்பம். எனது குடும்பத்தில் இந்த மூன்று பேரும் மரணம் அடைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

image

100 கோடி, 200 கோடி வருமானம் ஈட்டுபவர்கள் என சினிமாத்துறையினர் என்று மார்தட்டிக்கொண்டாலும், ஒரு கடைநிலை சினிமா ஊழியரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்பது தனிப்பட்ட வகையில் எனக்கு அவமானமாக இருக்கிறது. இனிமேலாவது சினிமாத்துறையில் எந்த ஒரு கடைநிலை ஊழியரும் படப்பிடிப்பு விபத்தால் மரணமடையாமல் இருக்க சினிமாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும்.

image

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கிறேன். இது நடந்த விபத்திற்கு பரிகாரம் அல்ல. இறந்தவர்களின் குடும்பத்திற்கு செய்யும் ஒரு சிறு முதலுதவி. ஆனால், இது இறப்பிற்கு சிகிச்சை அல்ல. சிகிச்சையை சினிமாத்துறையினர் இணைந்து செய்ய வேண்டும். இனிமேல் ஒரு கடைநிலை ஊழியரும் இறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை எனது கோரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக, நேற்று சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்ற ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து சினிமாத்துறையினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =