நியூஸி. அணியில் மாற்றம்: உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமான வேகப்பந்துவீச்சாளர் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிராக வெலிங்கடனில் நடக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக தற்போது வலதுகை வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே டிரன்ட் போல்ட், ஜேமிஸன், டிம் சவுதி ஆகியோர் இருக்கும் நிலையில், அனுபவ வீரர் மாட் ஹென்றியின் வருகை கூடுதல் பலம் அளிக்கும்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணியும் கைப்பற்றியுள்ளன. இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

இதில் நியூஸிலாந்து அணிக்கு வலு சேர்க்கும் விதமாக காயத்திலிருந்து மீண்டு, டிரன்ட் போல்ட் அணிக்குத் திரும்பியுள்ளார். 6.6 அடி உயரம் கொண்ட வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜேமிஸன் அறிமுகமாகிறார். அணியில் நீல் வாக்னர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் சொந்தப் பணி காரணமாக முதல் போட்டியிலிருது விலகியுள்ளார்.

இதுகுறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்த அறிவிப்பில், “இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீல் வாக்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவிக்கு முதலாவது பிரசவம் நடக்க இருப்பதால், அவர் அந்த நேரத்தில் அங்கிருப்பது அவசியம். ஆதலால், அணியிலிருந்து வாக்னர் விலகியுள்ளார், அவருக்குப் பதிலாக மாட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்றி 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவ்வப்போது அதிரடியாகவும் பேட்டிங் செய்யும் திறமை பெற்றவர். ஐபிஎல் போட்டியில் தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், கடந்த முறை கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியிலும் மாட் ஹென்றி இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த மாட் ஹென்றி இந்தியாவுக்கு எதிராக 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்தார். குறிப்பாக, தொடக்கத்திலேயே கே.எல். ராகுல், ரோஹித் சர்மா விக்கெட்டுகளை வீழ்த்தியும், நடுவரிசையில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டையும் வீழ்த்தி சரிவுக்குக் காரணமாக இருந்தவர் ஹென்றி என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 − = 78