டி.எஸ்.பி.,க்கு துணை கலெக்டர் பதவி:அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை

சென்னை: ‘குரூப் – 1’ தேர்வில் தேர்ச்சி பெற்றால், டி.எஸ்.பி.,யாக பணியாற்றுபவருக்கு, துணை கலெக்டர் பதவியை உருவாக்கி வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த, 2012 – 13ல் நடந்த, ‘குரூப் – 1’ தேர்வில், டி.எஸ்.பி., பணிக்கு ஏ.பாபு பிரசாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, டி.எஸ்.பி., பயிற்சியில் உள்ளார். துணை கலெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு, அரசு பணியாளர் தேர்வாணையம், 2016ல் அறிவிப்பு வெளியிட்டது. பாபு பிரசாந்த் விண்ணப்பித்து, 2017 அக்டோபரில் தேர்வு எழுதினார்.

மூன்றாவது நாளில் நடந்த தேர்வில், தவறான பக்கத்தில் எழுதிய விடைகளை அடித்துள்ளார். அப்போது, தேர்வு மைய கண்காணிப்பாளர், அந்த பக்கத்தில் கையெழுத்திடும்படி, பாபு பிரசாந்திடம் கூறியுள்ளார். அவர் மறுத்தும், கண்காணிப்பாளர் வற்புறுத்தியதால், வேறு வழியின்றி கையெழுத்திட்டுள்ளார்.

தேர்வாணையம் வெளியிட்ட தேர்வு பட்டியலில், பாபு பிரசாந்த் இடம் பெறவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மூன்றாவது விடைத்தாளை திருத்தவும், துணை கலெக்டர் பணிக்கான தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவும் கோரியிருந்தார்.மனுவை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இரண்டு முறை

‘குரூப் – 1’ தேர்வு எழுதிய மனுதாரர், இரண்டு முறையும், டி.எஸ்.பி., பணிக்கு தேர்வாகி உள்ளார். துணை கலெக்டராகும் குறிக்கோளில், மீண்டும் தேர்வு எழுதி உள்ளார். இரண்டு தாள்களில், 400க்கு, 575 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மூன்றாவது விடைத்தாளில், அவரது அடையாளத்தை காட்ட வேண்டிய தேவையில்லை.தேர்வாணையம் நியாயமான முடிவை எடுத்திருக்க வேண்டும். தற்போது, 29 துணை கலெக்டர் பதவி நிரப்பப்பட்டு விட்டது. மூன்றாவது விடைத்தாளில், போதிய மதிப்பெண் பெற்று, நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றால், கூடுதல் பணியிடத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை, அரசு பார்க்க வேண்டும்.

திறமையான, தகுதியான நபரை, அரசு இழக்கக் கூடாது. எனவே, ஒரு இடத்தை உருவாக்க முடியும் என்றால், மூன்றாம் விடைத்தாளை மதிப்பீடு செய்து, அதில் தகுதி பெற்றால், நேர்முக தேர்வுக்கு பின், துணை கலெக்டர் பதவியை வழங்கலாம். அரசிடம் இருந்து உத்தரவை பெற்று, இந்த நடைமுறையை, நான்கு வாரங்களில் முடிக்க வேண்டும்.இந்த உத்தரவை, முன்னுதாரணமாக கொள்ளக் கூடாது; இதற்கு மட்டுமே பொருந்தும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 − 30 =