சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் : இஸ்லாமிய அமைப்பினரிடம் காவல் ஆணையர் வேண்டுகோள்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தையடுத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் போராட்ட அமைப்பினரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை புதுப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆணையர் விஸ்வநாதன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த திடீர் போராட்டம் காரணமாக, சென்னை கிண்டி, ஆலந்தூர், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய கூட்டமைப்பினருடன் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வைத்தனர்.

அதில் முதற்கட்டமாக கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்று கைது செய்யப்பட்ட 147 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே சென்னையில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் 147 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது, “கண்ணன் ரவுண்டானா பகுதி அருகில் நடந்த சாலை மறியல் மற்றும் சம்பவங்களைத் தொடர்ந்து அனைத்து தலைவர்களையும் இங்கு வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினோம்.

அவர்களிடம் அமைதி காக்க வேண்டும், இந்தப் பிரச்சினை எந்த விதத்திலும் பெரிய விதமாகப் பரவி விடக்கூடாது, பொது அமைதி மிக முக்கியம் என்பதை நாங்கள் எடுத்துக் கூறி அவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துச் சென்றிருக்கிறார்கள்.

மக்கள் அனைவரும் பொதுநலன் கருதி, பொது அமைதி கருதி எந்த ஒரு சம்பவத்தையும் பெரிது படுத்தாமல் தீர்வு காணும் வகையில் செயல் பட வேண்டும் என்று அனைவரிடமும் நாங்கள் கேட்டுக் கொண்டோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

50 − = 43